இந்த மாதிரி எல்லாம் எங்க ஊர் மாமிகளொட மனசுல ஒரு கம்பெனியை பத்தி அவ்ளோ சுலபமா நல்ல எண்ணம் வராது. அவாளுக்கு வரிசையா ஒரு 5 - 6 கம்பெனி பேர் தெரியும். அதுக்குள்ள நம்ப கம்பேனி பேர் வந்துட்டா நாம பொழச்சோம், இல்லைனா மாமிகளோட தொடர் விசாரணைக்கு ஆளாக வேண்டி இருக்கும். அவாளோட லிஸ்ட்ல முதல் கம்பெனி @#$ஸிஸ். இந்த கம்பெனில மட்டும் ஒருத்தன் வேலை பாத்தாக்க அவன் ஒரு அறிவு கொழுந்து,கணக்கு புலி, கட்டி சமத்துனு அடுக்கிண்டே போகலாம். இயல்பா பாத்தாக்க அவாளும் நம்மை மாதிரியே சமத்துகுடமாத்தான் இருப்பா. இருந்தாலும் @#$ஸிஸ் சமத்துன்னா கொஞ்சம் ஒசத்தி தான்.

அகிலா மாமி...:)
எங்க தெரு அகிலா மாமிக்கு கம்பெனியோட மொதலாளி பேரும் தெரியும். நாமளே நழுவி ஓடினாலும் இந்த மாமி விடமாட்டா! ஏன்டாப்பா! பெங்களூர்ல தானே நோக்கு வேலை?னு மெதுவா சிபிஐ அதிகாரி மாதிரி ஆரம்பிப்பா. அந்த சமயம் நான் வேலை பாத்த கம்பெனிக்கு 83 நாட்டுல ஆபிஸ் இருந்தாலும் அகிலா மாமிக்கு தெரியாத கம்பெனிதான் அது.அதுனால மெதுவா பம்ப ஆரம்பிச்சேன். உடனே அந்த மாமி "என்னோட அண்ணா பிள்ளை பெங்களூர்ல இருக்கும் @$fooooooஸிஸ்ல(பெரிய கம்பெனிங்கர்துனால foooo நீட்டிதான் சொல்லுவா) இருக்கான்டா, அவன்ட சொல்லி உனக்கும் அங்க வேலை வாங்கி தரலாம்னா நீ இஞ்ஜினியர் இல்லையே!"னு சொல்லி கடுப்பேத்துவா. அவாளோட அண்ணா புள்ளையும் கோரமங்கலால(பெங்களூர்ல கலர்புல்லான ஒரு இடம்) என்னோட நித்யம் உடுப்பி உபஹார்ல ராத்ரி டிபன் சாப்டுவான். அவன் நித்யம் புலம்பர்து எனக்கு தான் தெரியும்.
"பேருதான் பெரிரிரிரிரிய @#$ஸிஸ், நயாபைசாவுக்கு ப்ரயோஜனம் இல்லை, “பேரு பெத்த பேரு தாகத்து நீலு லேது”ங்கர கதையா இவன் client வருவாங்கர்த்துக்காக எங்க ப்ராணனை வாங்கரான்டா. திங்கட்கிழமை ஆனா டை கட்டிண்டு வாங்கோ! புதன் கிழமை ஆனா எல்லாரும் கோமணம் கட்டிண்டு வாங்கோ! வெள்ளிக் கிழமை மட்டும் எல்லாரும் காத்தாட வாங்கோ!னு ஸ்கூல் மாதிரி ஆயிரத்தெட்டு ரூல்ஸு வேற. ஊருக்கு வெளில கம்பேனியை கட்டி வச்சுட்டு அங்க அவனோட பஸ்ல கூட்டிண்டு போகர்த்துக்கு அன்னியன்ல வர சதா மாதிரி பஸ் பாஸ் எடுக்கனும்டா! நம்ப கம்பெனிதானே ஒரு மாசம் கழிச்சு எடுக்கலாம்னு இருந்தோம்னா இரண்டு அல்லக்கைகள் செக்கிங் எல்லாம் பண்ணி நாம வித்தவுட்ல வரும் விஷயத்தை மொத்த கம்பெனிக்கும் மெயில் அனுப்பி நாறடிச்சிடுவாங்க. இவ்ளோ களோபரத்துலையும் நீ ஏன் அந்த மானங்கெட்ட பஸ்ல போறாய்?னு நீ நெனைக்கலாம். அதுக்கும் ஒரு காரணம் இருக்கு, ஒரு குஜராத் பிகர் கொஞ்ச நாளா "சுனியே! சுனியே!"னு இப்பதான் பேச ஆரம்பிச்சு இருக்கா. அவளோட கள்ளம் கபடம் இல்லாத தூத்பேடா முகத்துக்காக தான் இவாளோட எல்லா கொடுமையையும் சகிச்சுண்டு அந்த பஸ்ல போயிண்டு இருக்கேன்டா மாப்ளே!"னு மூச்சு விடாம அவன் சொன்னதை எல்லாம் நான் அகிலா மாமி கிட்ட சொல்லிண்டா இருக்க முடியும்.
லிஸ்ட்ல அடுத்து இருப்பது @#ரோ. பஞ்சாப்ல ஆத்துக்கு ஒருத்தரை மிலிட்டரிக்கு அனுப்பர மாதிரி எங்க ஊர் முழுசும் தெருவுக்கு 10 பேர் இந்த கம்பெனிலதான் மண்ணள்ளி போட்டுண்டு இருக்கா. பெருமாள் கோவில்ல தீபாராதனை கற்பூர தட்டு போய் தீர்த்தம் சாதிக்கர்த்துக்கு நடுவில் வரும் இடைவெளியில் “எங்க ப்ரியா காப்பி போட்டாக்க கண்ணை மூடிண்டு குடிக்கலாம்!னு சொன்ன காலம் போய் இப்பெல்லாம் "காயத்ரி முதல் ரவுண்டு இன்டர்வியூ போகும் போதே, 'அம்மா, நேக்கு இங்கையே கிடைச்சா நன்னா இருக்கும்னு தோன்றர்து பஸ் பஸ்ஸா எல்லாரும் இங்க வந்து இறங்கராமா!'னு பெங்களூர்லேந்து போன் பண்ணி இப்ப தான் சொன்ன மாதிரி இருக்கு இப்போ அவளுக்கு கீழ 8 பேர் வேலை பாக்கறாளாம்!" "எங்காத்து ஹரிஷுக்கு கூப்டு வேலை குடுத்தா அந்த கம்பெனில" மாதிரியான மாமிகள் சம்பாஷனைகள் இப்பெல்லாம் சர்வசாதாரணா ஆனதால ரேடிங்ல அசைக்க முடியாத இடத்துல இன்னமும் விடாமல் டால்டா விற்கும் அந்த கம்பெனி இருக்கு.

கோவில் மாமி....:)
மீசை இருந்தா விசு! மீசை இல்லைனா பசு!னு சொல்லும் ஜீன்ஸ் பட செந்தில் மாதிரி இந்த ரெண்டு கம்பேனிக்கும் ஒரு எழுத்து தான் வித்தியாசம். அகிலா மாமியோட அத்தங்கார் பொண்ணு கூட C-ல ஆரம்பிக்கும் அந்த கம்பெனில தான் வேலை பாக்கரா!னு அடிக்கடி பீத்துவா, ஒரு தடவை பீத்தல் ஓவர்ப்ளோ ஆகி அத்தங்கார் பொண்ணு ஆபிஸுக்கு ஒரு நாள் போகலைனா கூட அங்க ஒரு வேலை நடக்காது தெரியுமோ!னு பக்கத்தாத்து கோவில் மாமி கிட்ட சுவாரசியமா சொல்லிண்டு இருக்கும் போது, நடுல போன ஹரிகுட்டி சும்மா இருக்காம "ஏது அவாட்டதான் எல்லா பாத்ரூமோட சாவியும் இருக்கா"னு கேட்டுட்டு ஓடியே.. ஏஏஏஏ போய்ட்டான். “C#$-ல எதை வெச்சு ஆள் எடுக்கரான்னே தெரிலைடா, ஒவ்வொருத்தரும் என்னப் பாரு! உன்னப் பாரு!னு லட்டுலட்டுவா இருக்கா!”னு எங்க அண்ணா சொன்னது எவ்வளவு நிஜம்னு நேர்ல பாத்ததுக்கு அப்புறம் தான் எனக்கு தெரிஞ்சது.
“T#$-ல இருக்கும் எங்காத்து மாப்பிள்ளை அமெரிக்காவுக்கு போயிட்டு போயிட்டு வருவார்!”னு சொல்லும் மாமியிடம் US என்ன லூஸ்மோஷனா? போய்ட்டு போய்டு வரர்த்துக்கு!ன்னு கேக்க வாய் வந்தாலும் சிரிப்பை அடக்கிண்டு ‘ஸ்திரமா ஒரு இடத்துல நம்பாத்து மாப்பிள்ளை இருந்தான்னா நீங்க பாட்டி ஆக முடியும்!’னு ‘ரொட்டிசால்னா’ சேகர் சென்டிமென்டா பாயிண்டை பிடிப்பான்.
இது போக ‘தோசக்கல்’ மாதிரி ஒரு கம்பெனி,’அக்குபஞ்சர்’ மாதிரி ஒரு கம்பெனினு லிஸ்ட்ல இருக்கு. இது தவிர மத்த கம்பெனில நாம சீனியர் மேனேஜராவே இருந்தாலும் அகிலா மாமி ஒத்துக்க மாட்டா. எட்டாம் கிளாஸ் பாஸ் பெரிசா? SSLC-பெயில் பெரிசா? கதைதான்........:)