
ஆபிஸுக்கு போனா அங்க எல்லாம் ஒரே ஷேக்கு மயமா இருந்தது (பின்ன என்ன 3/4 போட்ட பிகரா இருக்கும்?னு நக்கல் அடிக்க வேண்டாம்). கடைசியா என்னோட உயரதிகாரியை பாத்து 'கும்புடுக்கரேன் எஜமான்!'னு சொன்னேன் (இங்க்லிபீஸ்ல ரிப்போர்ட் பண்ணர்துன்னு சொல்லுவாங்க). அதுக்கு அப்புறம் என்னோட சீட்டுக்கு போனா பக்கத்து சீட்ல ஒரு சூடான்காரார், கொஞ்சம் தள்ளி இன்னொரு ஷேக்கு உக்காச்சுண்டு இருந்தார். சாப்டாமா கூட இருக்க முடியும், ஆனா பக்கத்துல உள்ளவாளோட பேசாம மட்டும் திருனெல்வேலிகாரனால இருக்க முடியாது. பக்கத்தாதுல பாம் வெடிச்சாலும் எட்டிப்பாக்காம ப்ளாக்ல ‘பாதுஷா செய்வது எப்படி?’ன்னு படிச்சுண்டு இருக்கர்துக்கு நான் என்ன சிட்டில உள்ளவனா??
எங்க ஊரா இருந்தா, அண்ணாச்சி! என்னா வெயிலு அடிக்கி!னு மெதுவா ஆரம்பிச்சோம்னா 30 நிமிஷத்துக்கு குறைவு இல்லாம அண்ணாச்சி நம்ப கூட பேசுவார். அந்த கதை எல்லாம் இங்க நடக்காதுன்னு எனக்கு நன்னாவே தெரியும். சூடான்காரர் நல்ல ஆறடி ஒசரத்தோட கூடை பந்தாட்ட வீரர் மாதிரி இருந்தார். மெதுவா அவர்ட்டதான் பேச்சு குடுக்க ஆரம்பிச்சேன். இருந்தாலும் ரொம்ப எல்லாம் ஸ்னேகம் ஆகலை. நம்ப ஊர்ல எல்லா பயலும் கிரிக்கெட் பைத்தியம் புடிச்சு அலையற மாதிரி இங்க உள்ளவாளுக்கு எல்லாம் கால்பந்தாட்டம்னா உசுரு. தச்சுமம்முவுக்கு நம்ப மாவுடு தொட்டுக்கர மாதிரி இவா எல்லாருக்கும் புட்பால் இருந்தா போதும்..
உலககோப்பை போட்டி நடந்த போது இவாளோட கோட்டியின் உச்சகட்டத்தை பாக்க முடிஞ்சுது. ‘இந்தவாட்டி for ஆப்ரிக்கா!’னு முடியும் கால்பந்தாட்டத்தோட அந்த விளம்பரப் பாட்டுக்கு நடுல 'ங்கொக்கா மக்கா, ங்கொக்கா மக்கா'னு வரும் அந்த வரியை கேட்டவுடன் எனக்கு ஆச்சர்யமா இருந்தது. எங்கையோ ஆப்பிரிக்கால இருக்கும் பாப் பாடகி ஷகிரா (பேரை கவனமா வாசிங்கடே!) நம்ப கவுண்டமணியோட ரசிகையா?னு ஆச்சர்யமா இருந்தது. கூர்மையா கேட்டதுக்கு அப்புறம்தான் அது 'ங்கொக்கா மக்கா’ இல்லை ‘வக்கா வக்கா!’னு மனசுல ஆச்சு
எனக்கு புட்பால் பத்தி ஒன்னுமே தெரியாது, பெனால்டினு சொன்னா எனக்கு எங்க ஊர்ல எலக்ட்ரிசிட்டி பில் கட்டலைன்னா, 15 தேதிக்கு அப்புறம் காக்கி டவுசர் போட்ட ஒரு மாமா வந்து அவாத்து பீஸ்கட்டையை பிடிங்குண்டு போவார். பில்+50 ரூவா அபராதம் கட்டினாதான் திருப்பி கரண்ட் வரும். இதுதான் எனக்கு தெரிஞ்ச பெனால்டி. (இப்போ எல்லா வீட்டு பீஸ் கட்டையையும் நிரந்தரமா ஆற்காடு மாமா பிடிங்கி வச்சுருக்கார்னு கேள்விப் பட்டேன்)
கார்னர்நு சொன்னா எனக்கு என்னோட பெங்களூர் ஆபிஸ்தான் ஞாபகம் வரும். முதல் ப்ளோர்ல கதவை திறந்தோன்னே 'கன்னிமூலகணபதி' மாதிரி கார்னர்ல சக்கப்பழமா ஒரு டில்லி பிகர் ரோலிங் சேர் நிறைஞ்சு உக்காசுண்டு இருப்பா. அதுதான் எனக்குத் தெரிஞ்ச ஒரே கார்னர்.
இங்க உள்ளவா கூட பேசனும்னா புட்பால் பத்தி பேசினா போதும்னு புரிஞ்சது. 10 அடி நகருவதற்குள் 10 தடவை பாஸ் பண்ணி கொண்டு போகர்து ஸ்பெயின் அணியோட சிறப்பாம்சம். வெறும் 3 பாஸ்ல 70 அடி வரைக்கும் கொண்டு போகர்து ஜெர்மனியோட திறமை. ஆக்ரோஷமான அணி அர்ஜெண்டினா- இந்த மாதிரி பல விஷயங்களை பிட்டு போடுவதற்கு உபயோகமாகும்னு தெரிஞ்சுக்க ஆரம்பிச்சேன்.
இந்த மாதிரி ஒரு சமயத்துல தான் ஒரு நாள் அந்த சூடான் காரர்ட மெதுவா ஒரு பிட்டை போட்டேன். அரை இறுதிப் போட்டிக்கு பிரேசிலும் இல்லை, அர்ஜெண்டினாவும் இல்லை இனிமே புட்பால் பாத்து என்ன பிரயோஜனம்? னு மெதுவா ஆரம்பிச்சேன்.(லீவு அன்னிக்கு லேடிஸ் காலேஜ் வாசல்ல காத்துக் கிடந்து என்ன பிரயோஜனம்!னு மனசுக்குள்ள சொல்லிண்டேன்). அவர் கையை டேபிள்ல வச்சுண்டு தலையை டேபிள்ல சாய்ச்சுண்டு இருந்தார். பக்கத்துல போய் பாத்தா கேவி! கேவி! ஒரே அழுகை. (வடிவேல் குரலில்)தாய்ப் பாசத்துல இவர் நம்பளை மிஞ்சிடுவார் போலருக்கே!!னு நினைச்சுண்டே அவரோட முதுகை தடவி குடுத்து, அவர் கழுத்துல இருந்த டையை வச்சு அவர் கண்ணை எல்லாம் துடைச்சு விட்டு சமாதானம் பண்ணர்துக்குள்ள போதும்! போதும்!னு ஆயிடுத்து.
அப்புறம் தான் தெரிஞ்சது அந்த ஆளு பிரேசில் & அர்ஜெண்டினாவோட கன்னாபின்னா ரசிகர்னு. நல்ல வேளை பிரேசிலை பத்தி கேவலமா எதாவது சொல்லியிருந்தென்னா என்னோட பல்லை ஒடச்சு இருப்பார் அந்த சூடான் சிங்கம். பல்லும் வாயும் தப்பிச்சது குலதெய்வம் பெருவேம்புடையார் புண்ணியத்துலதான்...:). அதுக்கு அப்புறம் அந்த சூடான் சிங்கம் தக்குடுவுக்கு பயங்கர தோஸ்த் ஆயிட்டார். இரண்டு வாரம் என்னோட ஆபிஸ் கார் டிரைவர் லீவு போட்டப்போ கூட இவர்தான் கால் டாக்ஸி மாதிரி தினமும் என்னை பிக்கப்பு, ட்ராப்பு எல்லாம் ஓசிலையே பண்ணினார்.
இங்க உள்ள ஷேக்கு கூட நான் இங்க்லீஷ்ல பேசின கதையை தனியா ஒரு பதிவா போடலாம்னு இருக்கேன்.