
எனக்கும் அந்த மாய உலகம் மேல ஒரு சின்ன ஈர்ப்பு உண்டு. சின்ன வயசுலேந்தே மேடைல நின்னு பேசர்துன்னா ரொம்ப பிடிக்கும். அதுவும் நமக்கு பழக்கமே இல்லாத வெளியிடத்துல வெளி மனுஷா முன்னாடி எதாவது பண்ணி காட்டர்துன்னா சந்தோஷம் கரை புரண்டு அம்பை வரைக்கும் ஓடும். பத்மாசேஷாத்ரி அளவுக்கு செலவு செய்யக் கூடிய எந்த கலை சேவைக்கும் மோர்குழம்பு விடர்த்துக்கு நான் போகமாட்டேன். ஏதோ நம்ப ரேஞ்சுக்கு தாத்தாவோட பழைய கல்யாண கோட், அப்பாவோட 9 முழம் வேஷ்டியில் கட்டும் பஞ்சகச்சம் சகிதமா ஒட்டு மீசையோட போடும் பாரதியார் வேஷம், அம்மாவோட ரெட்டை வடம் சங்கிலியுடன் அங்கவஸ்திரம் சகிதமா வரும் பண்ணையார் வேஷம், ‘முடுக்கு’ மூச்சா மாமாவோட பழைய காவி வேஷ்டியை இரவல் வாங்கி காவேரிப் பாட்டியோட காசி பித்தளை கிண்டியோட வரும் போலி சாமியார் வேஷம்,பக்கத்தாத்து முருகன் படத்துல செருகி வச்ச மயிலிறகை தலையில் செருகிண்டு கைல வெண்ணீர் அடுப்பு ஓமக்குழல் வெச்சுண்டு நெத்திச்சுட்டி எல்லாம் போட்ட சுட்டியான நாலு பொண்கொழந்தேளுக்கு நடுவில் நிற்கும் கள்ளக் கிருஷ்ணர் அப்பிடின்னு செலவு இல்லாத வேஷம் மட்டும் தான் போடுவேன்.

நம்ப வாத்தியார்!..:)
இப்படியா வாழ்க்கை வேடிக்கை வினோதங்களோட போயிண்டு இருக்கும் போது சில சுவாரசியமான சம்பவங்கள் ஏற்பட்டது. எங்க ஊருக்கு சினிமா & சீரியல் ராசி அதிகம். டைரக்டர் ஷங்கர் ஜென்டில்மேன்ல தொடங்கி முதல்வன், அன்னியன் வரைக்கும் எங்க ஊர்லையோ அல்லது அம்பைலயோ படம் புடிக்காம போனது இல்லை, அதுலேந்து ஏகப்பட்ட சூட்டிங் எப்ப பாத்தாலும் நடந்துண்டே இருக்கும். “சாமி படத்துல வரும் த்ரிஷா எல்லாம் எங்காத்து திண்ணைல வச்சுதான் காபி குடிச்சா! னோக்கு தெரியுமோ!னும் “இது என்ன ப்ரமாதம்! அவளுக்கு ஐயங்கார்கட்டு மடிசாரே நான் தான் கட்டி விட்டேன் தெரியுமோ?” னும் சொல்லும் மாமா மாமிகள் எங்க ஊரில் சர்வ சாதாரணம்.

தக்குடு!...:)
அந்த மாதிரி ஒரு சமயத்துல தான் எங்க ஸ்கூலுக்கு சினிமாகாரா ரெண்டு பேர் வந்து "கள்ளம் கபடம் இல்லாத ஒரு முகவெட்டுடைய ஒரு பையன் வேணும்!"னு எங்க ஹெட்மாஸ்டர் கிட்ட கேக்கவும் அவருக்கு உடனே தக்குடுவோட முகம் ஞாபகத்துக்கு வர, என்னை ப்யூன் வந்து அழைச்சுண்டு போய், அவா ரெண்டு பேரையும் பாத்து பேசினேன். அவாகிட்ட பேசினதுலேந்து படம் பேர் 'பாரதி'னு தெரிஞ்சது, நான் தான் ஒரு பாரதியோட விசிறி அதுவும் போக அவா சொன்ன தேதில தான் என்னோட ரிவிஷன் டெஸ்ட்ல கணக்கு பரிட்சை வந்தது, அதனால ரெட்டை சலாம் சொல்லி ஒத்துண்டாச்சு. பாரதியாருக்கு ஒன்னு விட்ட மச்சினன் வேஷம், ஆக கண்ணம்மாவுக்கு தம்பி. கண்ணம்மாவா நடிச்சது நம்ப தேவ்யாணி, அந்த நாளும் வந்தது, காத்தால குளிச்சுட்டு, பளீர் கோபியோட காத்துண்டு இருந்தேன். 'டாண்'னு எட்டு மணிக்கு ஒரு வெள்ளை கலர் அம்பாசிட்டர் வந்து எங்காத்து வாசல்ல நின்னது. பக்கத்தாத்து மாமிக்கு பெருமை பிடிபடலை. உம்மாச்சி எல்லாம் கும்பிட்டுட்டு கார்ல பின் சீட்ல ஏறி உக்காந்தேன். அடுத்த நாள்லேந்து கார் வந்தவுடனே தெருல ரெண்டு பக்கமும் வெளில நின்னுண்டு பாத்தா, ஸ்கூலுக்கு போகர்த்துக்காக அவாத்து நடைல வச்சு தலை பின்னிக்கும் எங்க தெரு பிகர்கள் எல்லாம் வாசல்ல வந்து பின்னிக்க ஆரம்பிச்சது.
எங்க ஊர்லையே இருக்கும் ஒரு தெருல தான் அந்த சமயம் சூட்டிங் நடந்துண்டு இருந்தது. போன உடனே என்னை பாத்த டைரக்டர் "பையனுக்கு மேக்கப் போட்டு கூட்டிட்டு வாங்க!"னு சொல்லிட்டார். ஒரு ஆத்து பட்டாசாலைக்கு போனோம். அங்க பாத்தா எல்லாரையும் வரிசையா உக்காசுக்க சொல்லி மொட்டை அடிச்சுண்டு இருந்தா. அடுத்து உனக்குதான் தக்குடு!னு ஒருத்தர் சொன்னார். "அட ராமாஆஆஆ! இது ஏதுடா இது புது வம்பா இருக்கு!"னு ஆயிடுத்து. ஸ்கூலுக்கு வந்த ப்ரகஸ்பதிகள் நல்ல ரோல்! நல்ல ரோல்!னு சொன்னாளே தவிர மொட்டை அடிக்கர விஷயத்தை சொல்லவே இல்லை. அந்த மேக்கப் மாமா கிட்ட போய் "மொட்டை எல்லாம் அப்பா கிட்ட கேக்காம அடிக்க முடியாது, வேணும்னா எங்க ஸ்கூல்ல காந்தி தாத்தா வேஷம் போடரவா மாதிரி சப்பாத்தி மாவை தலைல தடவி முடியை மறச்சுடுங்கோ"னு அப்பாவியா முகத்தை வச்சுண்டு ஐடியா எல்லாம் சொன்னேன்.

அந்த கடங்காரன் காதுலையே வாங்கிக்காம எனக்கு மொட்டை அடிக்கர்துலையே குறியா இருந்தான். அதுக்கு அப்புறம் 'மொழு மொழு'நு இருந்த ஒரு மொட்டையை காட்டி "பாத்தியா, இவர் பாரதிக்கு சொந்த மச்சினர் அப்பாதுரை, அவருக்கே மொட்டை போட்டாச்சு, நீ ஒன்னு விட்ட மச்சினன் தான், அதனால ஒழுங்கா மொட்டை போட்டுக்கோ!"னு சொன்னார்.எல்லாரும் பாரதிக்காக உயிரையே குடுக்கரா நாம கொஞ்சம் #%வது குடுப்போம்னு சூப்பரா ஒரு மொட்டையை போட்டுண்டு தழைய தழைய குடிமியோட(செளரி) போய் காமிரா முன்னாடி நின்னேன். பாரதியா நடிச்சவர் பேர் ஷாயாஜி ஷிண்டே!னு ஒரு மராட்டிகாரர்(தூள் படத்துல அமைசரா வருவாரே).
ஒரு வாரம் 3 இடங்கள்ல வெச்சு என்னோட காட்சிகள் எல்லாம் சூட் பண்ணினா, அதுக்கு அப்புறம் காசில நடக்கும் சூட்டிங்குக்கும் வரர்தா இருந்தா கூட்டிண்டு போறோம்!னு சொன்னா, ஆனா நான் போகலை. ஆத்துல அப்பா கிட்ட ஒரே அர்ச்சனை, “உன்னோட புள்ளை உருப்படாம தான் போக போறான்!”னு அம்மா கிட்ட அப்பா சொல்லுவார்.மொட்டை போட்டதுல அப்பாவுக்கு பயங்கர கோவம். இன்னொரு பக்கம் தெருல,ஸ்கூல்ல எல்லா இடத்துலையும் தக்குடு நல்ல பிரபலமானான். படத்துல எல்லாம் நடிச்சு இருக்கன்!னு ஒரே பெருமை எல்லாருக்கும். படத்தோட ஆரம்பத்துல என்னோட பேர் வரும் போது தெருக்காராளுக்கு எல்லாம் ஒரே சந்தோஷம்..:) அதுக்கு அப்புறம் காலேஜ் வரைக்கும் எங்க போனாலும் எல்லாரும் மொதல்ல இந்த சினிமா சூட்டிங் பத்தி தான் ஜாரிப்பா.
இப்பவும் ஆகஸ்ட் 15, ஜனவரி 26-க்கு எதாவது சேனல்ல பாரதி படம் போட்டா விடாம எங்க தெரு மாமா மாமிகள் “பாரதில தக்குடு வரும்!”னு சொல்லிண்டே பாத்துட்டு சாயங்காலம் கோவில் தீபாராதனை போது எங்க அம்மா கிட்ட 'டீவீல உம்புள்ளையாண்டான் வந்தானே காத்தால"னு மறக்காம சொல்லர்தா அம்மா போன்ல சொல்லுவா.
பழைய நினைவுகள் தாமிரபரணி ஆத்தங்கரையில் தண்ணியோட ஆழம் குறையும் போது வெளில தெரியும் சின்ன சிவன்பாறை சிற்பம் மாதிரி சில சமயம் உண்டாகி ஆனந்தம் கலந்த ஏக்கத்தை ஏற்படுத்திட்டு போகர்து.