“போன மாசம் குலுமணாலிக்கு போனோம்! முந்தின வருஷம் ஜம்முல போய் ஜம் ஜம்னு போட்ல போனோம்! மைசூர்ல பாத்த அந்த சாமுண்டி கோவில் இன்னும் கண்ணுலையே நிக்கர்து தெரியுமோ!”னு கல்லிடைக்கு கோடை விடுமுறைல வரும் சில ‘பீத்தல்’ மாமிகளோட சம்பாஷனைலேந்து பிக்னிக்குனா எதாவது புது இடத்துக்கு போகர்து போலருக்குனு நாங்க யூகம் பண்ணிப்போம். எங்களை பொருத்தவரைக்கும் மதுரை தான் தூரதேச பிரயாணம். அம்பாசமுத்திரத்துல இருக்கும் எங்க அத்தையாத்துல அடிக்கடி கல்யாணம் வரும். அதுதான் எங்களுக்கு பெரிய்ய்ய பிக்னிக்கு. கல்யாணத்துக்கு பாம்பே டில்லிலேந்து வந்தவா எப்படியும் வேன் வச்சுண்டு அகஸ்தியர் அருவிக்கு குளிக்க போவா. போகும் வழில பொழுதுபோகனுமேனு ‘லொடலொட’னு பேசும் என்னையும் வேன்ல கூட்டிண்டு போவா. சொந்தக்காரா கூட போயிட்டு நன்னா அருவில குளிச்சுட்டு பாட்டும் கூத்துமா இருந்துட்டு வந்தா அந்த குஷிலையே ஒரு வருஷம் தாக்குபிடிக்கலாம். மறுபடியும் எதாவது ஒரு கல்யாணம் அடுத்த வருஷமே வந்துடும். பெண்களூருக்கு வந்ததுக்கு அப்புறம் கொஞ்சம் கொஞ்சம் வெளில எல்லாம் சுத்தி பாக்கர சான்ஸ் கிட்டிண்டு இருந்தது.
தோஹாவுக்கு வந்ததுக்கு அப்புறம் சுத்தமா ஒரு இடமும் போகர்து இல்லை. அடுக்களையே கோவில்! அடுப்பே சாமி!னு காலத்தை ஓட்டிண்டு இருந்தேன். போன வருஷம் கல்லிடைக்கு போயிருந்த போது வடக்குமாடத்தெருல ஒரு அக்கா "எங்காத்துக்காரர் தோஹால தான் இருக்கார், அவர் கிட்ட இந்த லெட்டரை மட்டும் குடுப்பேளா?னு ரொம்ப பவ்யமா கேட்டா. பொதுவா எங்க ஊர்லேந்து தோஹாவுக்கு என்னென்ன சாமான் குடுத்து விடுவானு யூகமே பண்ணமுடியாது. டிடாரங்காய்/ நார்தங்காய் ஊறுகாய்,வேப்பிலைகட்டி,பொருவிளங்காய் உருண்டை, ஆறு மாச மங்கையர்மலர்,சாம்பார்பொடி,ரசப்பொடி,பருப்பு பொடி,கோலப்பொடி,பின்னல்ல மாட்டும் குஞ்சலம்,வத்தல் வடாம்,அப்பளம்,’கொஞ்சம் போல’னு சொல்லிட்டு ஒரு கிலோ ஹார்லிக்ஸ் பாட்டில் நிறைய மாவடுனு ஒரு பெரிய பொட்டலத்தை நம்ப கைல குடுத்து ஏ பி டி பார்சல் சர்விஸ் அனுமார் மாதிரி நம்பளை ஆக்கிடுவா. “நம்பாத்து பிள்ளைனா தக்குடு! மாட்டேன்னா சொல்லமாட்டான்!”னு சக்கரகட்டியா தடுப்புஅணையெல்லாம் முதல்லயே போட்டு வச்சுடுவா. எல்லாத்துக்கும் முன்னாடி அவாத்துக்கு நம்மை கூப்பிட்டு ஒரு டம்பளர் காப்பியும் 2 தேங்குழலும் திங்கர்துக்கு வைப்பா. பக்கி மாதிரி அதை மட்டும் ‘லபக்!’னு சாப்பிட்டு தொலைச்சோம்னா அதுக்கு அப்புறம் “செஞ்சோற்று கடன் தீர்க்க, மாமியோட ஆத்துக்கு வந்து, காப்பியை குடித்தாயடா....!”னு கர்ணன் படபாட்டு தான்.
இதெல்லாம் இல்லாம ஒரே ஒரு லெட்டர்னு சொன்னவுடனே ஆச்சர்யத்தோட அதை வாங்கிண்டு வந்து அவாத்து மாமாட்ட தந்தேன். அதுல என்ன எழுதியிருந்ததோ அது பகவானுக்குதான் வெளிச்சம், ஆனா அந்த மனுஷன் எதோ காதல் கடிதம் வாசிக்கரமாதிரியே முகத்தை வச்சுண்டு பயபக்தியா வாசிச்சார். வாசிச்சுட்டு நேரா ஒரு கும்பல்ல கொண்டு வந்து சேர்த்துவிட்டார். அன்னிலேந்து நமக்கு பிடிச்சது ஏழரை. இன்னிக்கு வரைக்கும் என்னோட சாயங்கால & வீகெண்ட் ப்ரோகராம் எல்லாத்தையும் இந்த குரூப்தான் முடிவு பண்ணர்து. சில சமயம் கொஞ்சம் உபகாரமாவும் இருக்கா. நவம்பர் மாச தொடக்கத்துல தொடர்ந்து 5 நாள் லீவு இருக்குனு சொன்ன உடனே இந்த குரூப்ல இருக்கரவா எல்லாம் எங்கையாவது பிக்னிக்கு போலாம்னு திட்டம் போட ஆரம்பிச்சுட்டா. எத்தனை பேர் கிளம்பினாலும் கருங்குளம் மாமா & மாமி அவாத்து வண்டில எப்போதும் எனக்கு ஒரு சீட்டு போட்டு வச்சுடுவா. மாமா நம்ப ஊர் ‘மினிபஸ்’ சைஸுக்கு ‘ஆர்மதா’னு ஒரு வண்டியை கொண்டுவந்துட்டார். “ஆர்மதாவோ நர்மதாவோ ஒழுங்கா போய் சேர்ந்தா சரி!”னு சொல்லிண்டே எல்லாரும் ஏறி போனோம்.
மூனு கார்ல, எங்க வண்டிக்கு க.குளம் மாமா,இரண்டாவது வண்டிக்கு தஞ்சாவூர் மாமா & மூனாவது வண்டிக்கு வீ கே புரம் மாமா சாரதிகள். நான் கடைசி சீட்ல குழந்தேளுக்கு நடுல தண்ணி பாட்டிலோட பாட்டிலா உக்காசுண்டு வந்தேன். முதல் நாள் பீச்சுக்கு ஒழுங்கா போயிட்டு ஒழுங்கா வந்துட்டோம். இரண்டாவது நாள் மெட்ராஸ் மாமா அவாத்து மாமியோட தனியா கார்ல வந்தார். வீ கே புரம் மாமா வண்டிலதான் ஏலக்காய் மணக்க மணக்க டீ இருந்தது, அதனால நானு அவர் வண்டில ஏறிட்டேன். புறப்பட்டு கொஞ்ச நேரம் எல்லாரும் ஒழுங்கா போனா, திடீர்னு பாத்தா தனியா வந்த மெட்ராஸ் மாமா வண்டியை காணும். அவர் வண்டிலதான் பேல் பூரிக்கு உண்டான சாமான் எல்லாம் இருக்கு அதனால “ஓஒ பேல்பூரியை காணுமே!”னு எல்லாருமே ரொம்ப கவலைபட்டா. எங்க வண்டியை ஓட்டிண்டு இருந்த வீ கே புரம் மாமா திடீர்னு ஒரு வண்டியை ஃபாலோ பண்ணிண்டு வேற ரூட்ல போக ஆரம்பிச்சுட்டார். கடைசில பாத்தா அந்த வண்டில ஒரு லெபனான் பொம்ணாட்டி இருக்கா. லெபனான் பொம்ணாடிகள் & புருஷா ரெண்டு பேருமே நம்ப ஊர் எம் ஜி ஆர் ரை விட மூனு பங்கு ஜாஸ்தி நிறமாவும் லக்ஷணமாவும் இருப்பா. பின் சீட்ல அவாத்து மாமி இருக்கர ஞாபகமே இல்லாம பாவம் வெள்ளந்தியா ஃபாலோ பண்ணிட்டார்.
அப்புறம் ஒரு மாதிரி எல்லாரும் அந்த பிரெஞ்சு பீச்சுக்கு போய் சேர்ந்தோம். கிளம்பர இடத்துலேந்தே கண்ணாடி போட்ட மெட்ராஸ் மாமா “அது என்ன ஓய் பிரெஞ்சு பீச்சு?”னு கேட்டுண்டே இருந்தார். அங்க போய் பாத்தா ஒரே வெள்ளக்காரா கூட்டம். எல்லாரும் காத்தாட குளிச்சுண்டு இருந்தா. “இப்பதான் ஓய்ய்ய் பேர் காரணம் தெரியர்து!”னு அவரோட தங்கமணி முறைக்கர்தை கவனிக்காம எதோ E = 〖MC〗^2 பார்முலா புரிஞ்சமாதிரி பரவசமா இருந்தார். யூ எஸ் லேந்து ஒரு அக்கா தோஹாவுக்கு வந்திருந்தா. அவாளும் முதல்லேந்தே ஆட்டைல உண்டு. அந்த அக்கா எடுத்துண்ட போட்டோ எண்ணிக்கைல ஒரு கல்யாண ஆல்பமே போட்டு இருக்கலாம். க.குளம் மாமியோட காமிரா பயங்கர கிளாரிட்டி. ‘சலங்கை ஒலி’ கமலுக்கு கிடைச்ச ஒரு பொடியன் மாதிரி அந்த அக்காவுக்கு தக்குடுதான் போட்டோகிராஃபர். யூ எஸ் அக்கா கடலுக்கு நடுல போய் நின்னுண்டு “நன்னா முகம் தெரியமாதிரி எடு தக்குடு!”னு சொன்னா. நல்லவேளை நான் என்னோட காமிராவை கொண்டு போகலை. அதுல Zoom in பண்ணனும்னா பத்தடி முன்னாடி போகனும்,Zoom out னா பத்தடி பின்னாடி போகனும் ( “நூத்திபத்து ரூபாய்க்கு சகாயவிலைல காமிரா வாங்கினா அப்பிடிதான் இருக்கும்”னு எங்க அண்ணா நக்கல் அடிப்பான். அவனோட காமிரால 20 அடி பின்னாடி போய் எடுக்கனும்ங்கர்து தனி விஷயம்).
ஆடி பெருக்குக்கு கல்லிடைல ஆத்தங்கரைக்கு போய் தூக்குல கொண்டு போன புளியோதரை & இன்னபிற அயிட்டங்களை எல்லாம் காலி பண்ணிட்டு வரமாதிரி பீச்சுல உக்காசுண்டு எல்லா சோத்துமூட்டையையும் காலி பண்ணினோம். கடலைமாவை வச்சு வீகே புரம் மாமி ‘டோக்லா’னு ஒரு வஸ்து பண்ணி கொண்டுவந்து எல்லாருக்கும் குடுத்து டெஸ்ட் பண்ணிண்டு இருந்தா. அதோட செய்முறையை மெட்ராஸ் மாமி கேட்டுண்டு இருந்தா. ஆனா அவாத்து மாமாதான் ரொம்ப நுட்பமா ரெண்டு சந்தேகம் எல்லாம் கேட்டார் (இருக்காதா பின்ன, பண்ணறவாளுக்குதானே சந்தேகம் வரும்). மாமியும் உடனே தன் பங்குக்கு “கடலை மாவுக்கு பதிலா மைதா மாவு போட்டுக்கலாமா?னு டவுட் கேட்டா. அனேகமா இந்த வாரம் அவாத்துக்கு போனா ஒரு பாத்திரம் மைதாமா பசை கிட்டும். எல்லாம் நல்லபடியா முடிஞ்சாச்சு இன்னிக்கோட மங்களம் பாடுவா!னு பாத்தா “நாளைக்கு காத்தால எல்லாரும் அரைவயிறு மட்டும் சாப்பிட்டுட்டு 12 மணிக்கு ரெடியா இருக்கோ!”னு வீ கே புரம் மாமி குண்டை தூக்கி போட்டா. நானும் நாளைக்கு எதோ ஜெர்மன் பீச்சு போலருக்கு, ‘ஹைய்ய்யா ஜாலி!’னு நினைச்சுண்டு இருந்தேன். கடைசில பாத்தா பாலைவன சவாரிக்கு பொட்டல்புத்தூர் கோவில் யானைக்கு 4 சக்கரம் மாட்டின மாதிரி பொதிகாசலமா ஒரு கார் வந்து நின்னுண்டு இருக்கு. வீ கே புரம் மாமி & மாமா, தஞ்சாவூர் மாமா & மாமி பின்னாடி சீட்ல சாமான் மூட்டை மாதிரி பத்ரமா உக்காசுண்டு இருந்தா. டிரைவருக்கு பக்கத்து சீட்ல அடியேன் நெட்டுவாங்கம். சிட்டியை தாண்டர வரைக்கும் ‘கடமை கண்ணியம் கட்டுப்பாடு!’னு வண்டியை ஒழுங்கா ஓட்டின அந்த டிரைவர் பிரகஸ்பதி திடீர்னு 140 கிலோமீட்டர் வேகத்துல வண்டியை ஓட்ட ஆரம்பிச்சுட்டார்.
பாலைவன சவாரி!!
மத்த ரெண்டு வண்டில பலிகிடாவா முதல் சீட்டுல கருங்குளம் மாமாவும், மெட்ராஸ் மாமாவும் உக்காசுண்டு இருந்தா. 30 - 40 அடி உயரமான மணல் மேடுலேந்து செங்குத்தா வண்டியை ஓட்டிண்டு வந்தா. க.குளம் மாமா பெருமாள் கோவில் துவஜஸ்தம்பத்துல பாதி ஒசரம் இருக்கர்தால அவருக்கு இதெல்லாம் சாதாரணமா இருந்தது. நானும் மெட்ராஸ் மாமாவும் தான் ‘அம்மா’வோட கலெக்டர் மீட்டிங்க்ல ஓ. பன்னீர்செல்வம் மாதிரி ‘திக் திக்’னு நெஞ்சு படபடக்க முழிச்சுண்டு இருந்தோம். ஒரு மாதிரியா கடைசில கடலுக்கு பக்கத்துல போய் எங்கையோ எல்லாரையும் இறக்கிவிட்டா. தப்பிச்சோம் பொழச்சோம்!னு ஓடி போய் கொஞ்ச நேரம் மண்ணுல உக்காசுண்டு ஆசுவாசபடுத்திண்டோம். அதுக்கப்புறம் மாமாக்கள் எல்லாம் வட்டசட்டமா உக்காச்சுண்டு, அமெரிக்க பொருளாதாரம்,மெட்ராஸ்ல சதுர அடி விலை நிலவரம்,ஐஸ்குட்டிக்கு என்ன குழந்தை பிறக்கும்,கனிமொழி,ராஜா,ஜெயலலிதா,அழகிரி மாதிரியான உலக விவகாரங்களையும். மாமிகள் எல்லாம், ‘தங்கம் விலை கூடிண்டே போகர்து பாத்தியோ!’ ‘உங்காத்துல வாஷிங்மெஷின் யாரு போடுவா?’ ‘ஹாவ் யூ சீன் தட் ஏழாம் அறிவு மூவி?’ ‘சுடிதார் மெட்டீரியல் மெட்ராஸ்ல எங்க நன்னா இருக்கும்?’ ‘எங்காத்து மாமா டால் ப்ரை பிரமாதமா பண்ணுவார்.’ மாதிரியான சம்பாஷனைகள்ல பிஸியா இருந்தா.
ராத்ரி அங்க சாப்பாடு கிடைக்கர்துக்குள்ள ப்ராணன் போயிடுத்து. தஞ்சாவூர் மாமா அவாத்து மாமியோட ஹேண்ட் பாங்கை ஸ்டைலா போட்டுண்டு குறுக்கையும் நெடுக்கையுமா போயிண்டு இருந்தார். மத்த மாமாக்கள் எல்லாம் அவரை கூப்பிட்டு ஜாரிச்சதுல அவாத்து டீலிங் வெளிய வந்தது. அவரோட மூனு வயசு பிள்ளை மாமியை மாதிரியே பாக்கர்துக்கு(மட்டும்) பயங்கர சாதுவான பிள்ளை, ஆனா சட்டை/ட்ராயர்/சாக்ஸ்/செருப்பு போட்டாலும் கத்துவான் அவுத்தாலும் கத்துவான். அதனால ஒருத்தர் பையனை வெச்சுண்டா இன்னொருத்தர் ஹேண்ட் பாக்கை வச்சுக்கனும். உள்ளாட்சி தேர்தல் முடிஞ்சு கூடன்குளம் மேட்டர்ல அம்மா 'பல்டி' அடிச்ச மாதிரி கொஞ்ச நேரத்துலயே அவரோட ஒரு கைல பையனையும் இன்னொரு கைல ஹேண்ட்பாக்கையும் மாட்டிவிட்டுட்டு மாமி தோழிகளோட உலாவ போயிட்டா.
ராத்ரி 9 மணியோட திருப்பி கார்ல ஏறி சிட்டிக்கு போயிண்டு இருக்கும் போது அந்த டிரைவர் கிட்ட என்னோட ‘பட்லர்’ அரபில பேச ஆரம்பிச்ச உடனே அவரும் ரொம்ப குஷியாகி அவரோட ‘பட்லர்’ இங்கிலிபீஸ்ல பேய் கதை எல்லாம் சொன்னார். “போனவாரம் பாதிராத்ரி திரும்பி போகும் போது பாலைவனத்துக்கு நடுல வச்சு வெள்ளைகலர் டிரெஸ் போட்ட ஒரு பொம்ணாட்டி வண்டியை நிப்பாட்டி லிப்ஃட் கேட்டா?”னு ராமநாராயணன் மாதிரி அடிச்சுவிட்டார். எங்க வண்டில இருந்த ரெண்டு மாமிகளும் பயந்து நடுங்கிண்டு “பேய்/பிசாசெல்லாம் வருமா? உங்களுக்கு பயம் இல்லையா?”னு அவாளோட ரங்கமணிட்ட கேட்டா. “சமத்து! பேய் பிசாசெல்லாம் வெறும் பொய்! நீ இருக்கும் போது இன்னொரு பேய் இங்க வரமுடியுமா? கல்யாணத்துக்கு முன்னாடி பேய்க்கு கொஞ்சம் பயந்தேன், கல்யாணத்துக்கு அப்புறம் பேய்/பிசாசெல்லாம் பழகி போச்சு”னு வீ கே புரம் மாமாவும் தஞ்சாவூர் மாமாவும் flow-ல கோல் போட்டுண்டு இருக்கும் போதே ஒரு வழியா வீடு வந்து சேர்ந்தோம்.
39 comments:
போஸ்ட் ரொம்ப நீளமா ஆனதுக்கு ரொம்ப ரொம்ப சாரி! எந்த பாராலையும் கத்திரி போட்டு வெட்டர்துக்கே மனசு வரலை. ரெண்டு போஸ்ட் மாதிரி நினைச்சுண்டு படிக்கவும்.
I know this IS a thoroughly enjoyable dune bashing:) aanaalum adhaiyum sirikka, sirikka solradhu thakkudukku mattumae mudiyum
போட்டோஸ் , facebook ல பார்த்தேன்...... இந்த போஸ்ட் வாசிக்கும் போது, அவாதான் இவா போல என்று நினைச்சுப் பார்த்தப்போ..... இன்னும் அதிகமாக சிரிப்பு வந்துச்சு..... அம்பி பத்தி தெரியாம , நல்லெண்ணத்துல அழைச்சிட்டு போய்ட்டா. .... ஹி,ஹி,ஹி,ஹி....
ஹாஹா சூப்பர் தக்குடு.
இனி கொஞ்ச நாளில் உமக்கும் 'பேய் பிசாசு' பயம் போய்விடும்:-))))))
படிக்க ரொம்ப சுவாரஸ்யமாக இருந்தது
//போஸ்ட் ரொம்ப நீளமா ஆனதுக்கு ரொம்ப ரொம்ப சாரி!//
அப்படியெல்லாம் நினைக்க வைக்காத எழுத்து நடை. சுவாரஸ்யமா புன்னகை மாறாமல் படிக்க முடிந்தது. பின்றீங்கப்பா...
நல்ல சரளமன நடை. நகைச்சுவையான வர்ணனைகள். நீளம் பெரிதாகத் தெரியாமல் சுவாரஸ்யமாகப் படிக்க வைத்தது. அசத்தறீங்க...
நன்னா எழுதிர்க்கேள்ணா..உங்க கூடவே உக்கார்ந்துண்டு சவாரி போன அனுபவம்..
பாலைவனப் பயணம் - நாங்களும் சென்றது போல இருந்தது தக்குடு...
துளசி டீச்சர் சொல்ற மாதிரி இன்னும் கொஞ்ச நாள்-ல உங்களுக்கும் பயம் போயிடும்... :)
தக்குடு ரிட்டர்ன்ஸ்... :))
Good one...Thakkudu.
எச்சூச் மி தக்குடு - நீங்க அவசியம் இதில் பங்கேற்க வேண்டும்.
தங்கத் தவளைப் பெண்ணே
அடுப்படியே கோவில்! ஆம்படையானே தெய்வம்!அப்படின்னுதான் சொல்லுவா? உங்காத்துல என்ன ஆகப்போரதோ? ஆம்படையனே தெய்வமா? இல்ல அம்படையாளே தெய்வமான்னு தெரியலை.
ரொம்ப நன்னாயிருக்கு தக்குடு நீ எழுதினது.வழக்கம் போலவே சிரிச்சு சிரிச்சு தான்....
very very very nice post:))) ABT parcel service aanjameyar!!! what an imagination..laughed un contollably.welldone thakkudu.we got our friday bonus without disappointment. thank you soooo much. sasisuga203.
நீங்க இவ்வளவு நல்லவரா !!! நேத்திக்கு தான் ஒரு கமெண்ட் போட்டு request பண்ணினேன்...DOHA பத்தி எழுத ....உடனே எழுதிட்டேளே!!! அதன் எலாரும் இந்த குழந்தைய சமத்து ன்னு சொல்லறா :-)
சொன்ன பேச்சை உடனே கேட்டதுக்காக ...ஒரு ஸ்பூன் ...கரெக்ட் அதே தான்....உங்களுக்கு பிடிச்ச திரட்டிப்பால் :P
கடைசீ பாராவைப் பத்தித்தான் மொதல்ல கேட்கணும். இன்னும் எவ்ளோ நாள்ல நீங்க பேய் பிசாச பார்த்து பயப்படாத காலம் வரும்!!
ரொம்ப பேசறவாளுக்கு மைதா பேஸ்ட்ல பட்சணம் பண்ணி வாயில் தீத்திவிட்டுடுவா! ஜாக்கிரதை!
சகாய விலையில காமெரா கிடைச்சாலும் வித்தை தெரிஞ்சவன் எடுக்கனும்ங்கிறேன். :-)))))
அழகு மொழி நடை.. நகைச்சுவைப் பேச்சு.. மிகவும் ரசித்தேன்..!!
அப்புறம், ‘டோக்லா’ குஜராத்தி ஸ்பெஷல் டிஷ்.. நம்ப ஊர் இட்லி மாதிரியே சாஃப்ட்டா இருக்கும்..
யெச்சூஸ்மி. இன்னும் ஊருக்குக் கிளம்பாம போஸ்ட் எழுதிண்டு என்ன பண்ராப்பில மாப்பிள்ளை சார்.;)
பாலைவன சஃபாரி சரி. அங்க டான்ஸ் எல்லாம் பாக்கலியா!!! தோஹால தான் ஸ்நேகா வோட அண்ணா கூட இருக்காராம்.
அடுத்த மாதப் பதிவுல அடுப்படியும் அம்பாளும் பத்தி எழுதணும்.சரியா;)))
very interesting post thakkudu ;). karana pattu ulta super, face bookla photo parthen, ava unna nalla ennathlu kootindu pona nee eppadi aval pathri ezuthara.
கலக்கிட்டீங்க தக்குடு.
தங்கத்தவளை கதையை நீங்கள் தொடர்வதைப் படிக்க ஆவல். கட்டாயம் எழுதவும்.
செம கலக்கல்.. :-))
தக்குடு பதிவுண்ணா பதிவுதான்
நீள்ம் பொருட்டில்லை
படிக்க படிக்க சுவாரஸ்யம் கூடிண்டுதான் போனது
குறையலே கொஞ்சம் படம் சேர்த்து போட்டிருக்கலாம்
அருமையான பதிவு தொடர வாழ்த்துக்கள்
//பொழுதுபோகனுமேனு ‘லொடலொட’னு பேசும் என்னையும் வேன்ல கூட்டிண்டு போவா//
விளையும் பயிர் முளையிலேயே தெரியும்னு இதை தான் சொல்றதா...:))))
Super post asusual... default...;)))))
தக்குடு ஆடிக்கொரு பதிவு அமாவாசைக்கு ஒரு பதிவு போட்டாலும் சுவாரசியம் குறையாம எழுதரே.
Nice.
TM 4.
நீளம்னு சொன்ன பிறகுதான் தெரிஞ்சது. எங்களையும் 'திக்'னிக் கூட்டிண்டு போனதுக்கு நன்றி தக்குடு! :)
Boss-- "School closed due to rain.." ங்கறா மாதிரி-- ஏதாவது important notice board announcement இருக்கும் னு பாத்தா, இங்க முழு நீள reel ஓட்டிண்டு இருக்கேள்! ஆயிரத்தெட்டு வேல கெடக்கு-- இங்க உங்களுக்கு French Beach சவாரி வேற இந்த அழகுல! போன இடமெல்லாம் ஆனா ஏதோ plan போட்டு போனாப்ல தான் இருக்கு டோய்!
தக்குடு டிசம்பர் ஒண்ணாம் தேதிக்கப்புரம் கல்லிடை மாமா மாமி பத்தியும் யாரவது பதிவு எழுதுவாளா உன் தோஹா வட்டத்துலேர்ந்து, கருங்குளம் மாமா, மாமி, தஞ்சாவூர் மாமா, மாமி, வீ கே புரம் மாமா மாமி note the point....:))
அன்புடன்
சுபா
கல்யாணபரிசு ஞாபகம் வருது”கல்யாணத்துக்கு முன்னாலே ஹாஸ்யகதையா எழுதிண்டு இருந்தேன் கல்யாணத்துக்கு அப்பறம் ஒரே சோகம்தான்....
இது ரொம்ப அநியாயமா இருக்கு. நானும் 19 வருஷம் தோஹாவில் இருந்தேன் (2000 வரை), இந்த ஃப்ரென்ச் பீச் அப்ப இல்லையே! அவ்வ்வ்வ்வ்! நம்ம ஃப்ரெண்ட் பாச்சா மாமாவுக்கு அங்க போற வழி சொல்லுங்கோ, மாமி கைய உடைச்சு ஊருக்குவேற அனுப்பிட்டான்!
-ஜெ.
@ லதா மேடம் - :)
@ சித்ரா அக்கா - நீங்க போட்ட இந்த கமண்ட்டுக்கு அப்புறம் 6 மூஞ்சி புஸ்தக அழைப்பு. (எல்லாருக்கும் அந்த போட்டோ பாக்கனுமாம்) :P
@ துளசி டீச்சர் - அதே அதே
@ சாரதி சார் - :)
@ அண்ணா - சந்தோஷம் :)
@ கணேஷ் - முதல் வருகைக்கும் பாராட்டுக்கும் நன்னிஹை!
@ விச்சு - :))
@ வெங்கட் அண்ணா - :)
@ துபாய் ராஜா - :)
@ Techops மாமி - :)
@ கெளதமன் சார் - கதை கத்திரிக்காய் நமக்கு வராது சார்.
@ ரமா அக்கா - என்ன ஆகப்போகர்தோ பகவானுக்கு தான் வெளிச்சம் :)
@ சசி அக்கா - :)
@ டாடிஅப்பா - திரட்டிப்பாலுக்கு நன்றியோ நன்றி!
@ மைனர்வாள் - முழு போஸ்டையும் படிச்சு இருக்கேள்னு ஒத்துக்கறேன் :P
@ சுபத்ரா - எங்க போனாலும் இந்த குஜராத் நம்ப பின்னாடியே வருது! :)
@ வல்லிமாமி - கிளம்பிண்டே இருக்கேன். :)
@ வித்யா அக்கா - நீங்க ஸ்கூட்டில கூட்டிண்டு போன மாதிரியா?? :P
@ கீதா மேடம் - கொஞ்சம் கஷ்டம் தான்...
@ அமைதி அக்கா - :)
@ ரமணி சார் - வாங்க பிரபல பதிவரே! :)
@ இட்லி மாமி - நம்ப ரெண்டு பேருமே சின்ன வயசுலேந்தே ஓட்ட வாய் தானே!! :P
@ லெக்ஷ்மி மாமி - :)
@ துரைடேனியல் - ஓட்டு போட்ட அண்ணனுக்கு ஒரு டீ சொல்லுப்பா! :)
@ கவினயா அக்கா - நீங்க வந்துருக்கனும் அக்கா :)
@ மாதங்கி - கடை இந்த வாரத்துலேந்து லீவு :)
@ சுபா மேடம் - இப்ப எல்லா மாமா/மாமியும் எது பேசினாலும் "ப்ளாக்ல போட்டுராதே தக்குடு"னு சொல்லிட்டுதான் பேசரா :)
@ TRC மாமா - :P
@ ஜகன் நாதன் சார் - உங்க நண்பர் பிடிங்கி எடுக்கரார் பிரெஞ்ச் பீச்சுக்கு வழி கேட்டு! :)
உங்க பதிவும் ரொம்ப நன்னா இருக்கு..
ஓய் தக்குடு!
கல்யாணத்துக்கு முன்னாடி கடைசி ஆசை மாதிரி இந்த adventure trip ஆ? கல்யாணத்துக்கு அப்புறம் எல்லா adventureம் ஆத்துலேயே கிடைக்கும் :)) வெளில போக வேண்டாம்.
honeymoon trip எங்கே? இந்தியாவா இல்லை ஸ்விஸ் ஆ?
ரொம்ப நன்னா இருக்கு!
தக்குடு ! உனக்கு ரொம்ப தைரியம் ! ஒண்ணு பயந்ததை பயந்தேன்னே ஒத்துகரேயே அதுக்கு. இன்னொன்னு, நீ இப்படி எழுதறதை சமந்தபட்டவா படிச்சா என்னாகும்ன்னு யோசிக்காம எழுதறியே அதுக்கு.
ஆனா, அது என்ன உம்மாச்சி ப்ளாக்ல அம்பாள பத்தி அவ்வளவு நன்னா எழுதிட்டு , இங்க பொண்களை எல்லாம் பேய், பிசாசுன்னு எழுதற? அதெல்லாம் அவாத்து மாமா சொன்னதா? இல்லை மாமா சொன்னதா நீயா எழுதினதா?
போஸ்ட் ரொம்ப நீளமா ஆனதுக்கு ரொம்ப ரொம்ப சாரி! எந்த பாராலையும் கத்திரி போட்டு வெட்டர்துக்கே மனசு வரலை. ரெண்டு போஸ்ட் மாதிரி நினைச்சுண்டு படிக்கவும்.//
தக்குடு போஸ்ட் எவ்ளோ பெரிசா இருந்தாலும் பரவாயில்லை .திறந்த வாய் மூடாம சிரிச்சிட்டு இருந்தேன் .மைதா பசை கிடைச்சா பார்சல் ப்ளீஸ்
கிராப்ட் செய்ய யூஸ் ஆகும்.
//
கல்யாணத்துக்கு முன்னாடி //
.அப்படியா சேதி .அரசல் புரசலா கேள்விபட்டது .
ஓகே ஓகே .enjoy your trip Thakkudu .
Super Thakkudu Sir :))
Post a Comment
யெச்சுஸ்மி, comment பொட்டி இங்க இருக்கு.....:)