ஆவணியாவிட்டத்துக்கு கல்லிடை போயிட்டு சதுர்த்தி முடிஞ்ச கையோட தோஹா வந்தோம். எப்போதுமே ஆடி மாசம் வெக்கெஷன்ல போகர்தால ஆத்தாடி மாரியம்மா பாட்டோட அம்மன் கோவில் திருவிழாதான் நடக்குமே தவிர கல்யாணம் காதுகுத்துனு நல்ல சாப்பாடுக்கு வழியில்லாமையே இருக்கும் இந்த தடவை தோஹால இருக்கும் ஒரு மாமா அவரோட பொண்ணுக்கு ஆகஸ்ட்ல கல்யாணம் வச்சு பத்திரிக்கையும் குடுத்து இருந்தார். பந்தக்கால் நாட்டுக்கே வந்துடரேன் கவலையே படாதீங்கோனு சொல்லிட்டேன். மெட்ராஸ்ல வந்து இறங்கின அன்னிக்கு மத்தியானமே குடும்பத்தோட திருவண்ணாமலைக்கு போயாச்சு. கோவிலுக்கு உள்ள நுழையும் போதே நல்ல மழை. அருமையான தரிசனம் பண்ணிட்டு வெளில வந்தா ‘கிரிவலம் எவ்ளோ தூரம்’னு எங்க மாமியார் கேட்டா. வாக்கிங் அப்பிடிங்கர ஊருக்கு எந்த பக்கம் வழினு தெரியாத மாமா மாமியை வச்சுண்டு பதினஞ்சு கிலோமீட்டர் கிரிவலம் நடக்காத காரியம்னு தெரிஞ்சதால யாராவது கிரினு பேர் வச்ச பையன் இருந்தா அவனை நிக்க வச்சு வேணும்னா வலம் வரலாம் னு சொன்னேன். கிரிவலத்துக்கு பதிலா கார்லையே வலம் வரலாம், கிரிவலப்பாதைல எட்டு சிவலிங்கம் வரும் போது கண்ணத்துல போட்டுக்கோங்கோனு சொல்லி கூட்டிண்டு போனேன். பதினஞ்சு வருஷம் முன்னாடி கிரிவலம் போன போது இருந்த இடமே இப்ப இல்லை. நாலு அடிக்கு பத்து கடை வருது. ஆந்திரா கோஷ்டி நிறைய வரர்தால கடை பேர் எல்லாம் தெலுங்குல எழுதியிருக்கா. திராவிட மாடல்ல ஹிந்தி மட்டும் எழுதகூடாது மத்தபடி ஓங்கோலில் இருந்து வந்தவர்களுக்கு தெலுங்கு இனிக்கும். ‘இந்த்ர லிங்கம் வருது கண்ணத்துல போடுங்கோ’னு சொன்னா எங்க மாமியார் ‘இங்கு சூடான பஜ்ஜி வடை கிடைக்கும்’னு போர்டு போட்ட எதோ ஒரு காபி கடையை பாத்து கண்ணத்துல போட்டுண்டா. அடுத்த மூனு லிங்கமும் இதே மாதிரி காப்பி கடை, டிடன் கடை, பிரியானி கடைக்கு கும்புடு போட்டு கழிஞ்சது. கொஞ்சம் மழை வேற பெஞ்சுண்டு இருந்தது. லிங்கம் ஏன் ரோட்ல இருந்து பாத்தா தெரியமாட்டெங்கர்துனு தங்கமணி ரொம்ப குறைபட்டுண்டா. உங்காத்து பெட்ரூம்ல உக்காந்துண்டு சாமி பாக்கனும்னு நினைச்சா முடியுமாடினு கேட்டேன். மழைக்கு பஜ்ஜியும் டீயும் நன்னா இருக்கும் எதாவது கடைவந்தா வண்டியை நிறுத்துங்கோனு மாமா காதுல எங்க மாமியார் சொன்னா. அவர் என்ன மூடுல இருந்தாரோ தெரியலை அவாத்து வாசல் வரைக்கும் வண்டியை நிறுத்தவே இல்லை.
அடுத்த நாள் ஆவணியவிட்டத்துக்கு கல்லிடை போயாச்சு. தெருல பழைய கலகலப்பு இல்லை. பாதிபேர் வெளியூருக்கு போயிட்டா, கொஞ்சம் பேர் நடமாட்டம் இல்லை, கொஞ்சம் பேர் போட்டோல இருக்கா. நான் வழக்கம் போல ஆன்லைன்ல தோஹால இருக்கும் மாமாக்களுக்கு உபாகர்மா பண்ணிவச்சுட்டு நானும் போட்டுண்டேன். ஒரு காலத்துல LMS மாமாவாத்து முன்னடி ரூம்ல குளத்து தீக்ஷிதர் மாமாட்ட சங்கல்பம் பண்ணர்துக்கு உக்கார இடம் கிடைக்காது. வாய்க்கால் மண்டபம் நிறைஞ்சு ஆட்கள் இருப்பா. எல்லாம் கனவு மாதிரி இருக்கு. காயத்ரி ஜபம் கழிஞ்சு அடுத்த நாள் காத்தால ஸ்ரீரங்கத்துல கல்யாணத்துக்கு விரதம் ஆரம்பம். ராத்ரியே ரெண்டு பஸ் மாறி காத்தால ஆறு மணிக்கு மண்டபம் போயாச்சு. கல்யாண மண்டபம் போகர்துக்கு முன்னாடி அம்மா மண்டபம் போயி அது எப்பிடி இருக்கும்னு பாத்துட்டு வந்தேன். காத்தால டிபன்ல ஆரம்பிச்சு அடுத்த நாள் நலுங்கு டிபன் வரைக்கும் பிரமாதமா இருந்தது. ரொம்ப நாளா என்னோட மூஞ்சி புச்தகத்துல கமலாம்பாள் காட்டெரிங் சர்வீஸ்னு ஒரு ரீல்ஸ் வீடியோ வரும். 'அவாத்து கல்யாணத்துல பரிமாறின டிபன்! இவாத்து கல்யாணத்துல போட்ட சாப்பாடு'னு வீடியோ வந்துண்டே இருக்கும். நானும் நாக்கை தொங்கபோட்டுண்டு பாப்பேன். 'கடைசி வரைக்கும் வீடியோ பாத்ததுதான் மிச்சம்'னு தங்கமணி நக்கல் அடிப்பா. சைட் அடிச்ச பொண்ணே பக்கத்து சீட்ல உக்காந்த கதையா அந்த காட்டிரிங் சர்வீசோட சமையல் இன்ப அதிர்ச்சியா இருந்தது. மடமடனு குளிச்சு ரெடியாகி டிபன் சாப்பிட்டு மேடைக்கு வந்துட்டேன். பொதுவா எந்த விஷேஷத்துக்கு வந்தாலும் வைதிக காரியங்கள்ல ஒத்தாசையா இருக்கர்து என்னுடைய வழக்கம். சாப்பிட்ட டிபன் கொஞ்சம் ஜெரிச்ச மாதிரியும் ஆச்சு பொண்ணாத்துக்காராளுக்கு உபகாரமா இருந்தாப்புலயும் ஆச்சு. முதல் நாள் காத்தால விரதம் நாந்தினு வரிசையா எல்லாம் நல்லபடியா ஆச்சு. பொண்ணோட அப்பாமாவை உண்மையில் பாராட்டனும் ஏன்னா மத்தவா மாதிரி வீடியோகிராபர் சொன்னதை எல்லாம் கேட்டுண்டு அப்பிடியே போஸ் குடுத்துண்டு இருக்காம “எந்த விஷயமும் ரெண்டாம் தடவை செய்ய முடியாது நீங்க தான் முதல் தடவை பண்ணும் போதே ஒழுங்கா எடுக்கனும்”னு சொல்லிட்டார். பாலிகை தெளிக்க வரவா எல்லாரும் பஞ்சாபி டான்ஸ் ஆடப்போறவா மாதிரி வரா. தலைமுடி ஒருபக்கம் தொங்கர்து புடவை தலைப்பு இன்னோரு பக்கம் இதுக்கு நடுல பக்கம் பக்கமா விளக்கு வேற எரியர்து. போட்டோவுக்கு போஸ் குடுத்துண்டே ஒரு மாமி பாலிகையை வாத்யார் தலைல தெளிச்சுண்டு இருந்தா, அவா தெளிக்கர்து கூட கவனிக்காம அவர் போன்ல பேசிண்டு இருந்தார். ‘அப்பிடியே நேச்சுரலா இருக்கு மாமி! இன்னொரு தடவை அவரோட தலைல தெளிங்கோ’னு சொல்லி போட்டோகிராபர் பிரகஸ்பதி ஏத்தி விட்டுண்டு இருந்தார். நாந்தி ஆகும்போது யார் யாருக்கு பிரதக்ஷிணம் பண்ணர்துனு ஒரே குழப்பம். மாப்பிள்ளையோட அப்பா பழக்கதோஷத்துல அவாத்து மாமியை பிரதக்ஷிணம் பண்ண ஆரம்பிச்சுட்டார். அவருக்கு என்ன தெரியுமோ அதைதானே அவர் பண்ணுவார். மாமிக்கு ஒரே சிரிப்பு. இதுக்கு நடுல கலிபோர்னியாலேந்து வந்த ஒரு மாமி நானும் பிரதக்ஷிணம் பண்ணலாமா? ஆனா எங்க மாமனார் மாமியார் இருக்கானு வாத்யார்கிட்ட டவுட் கேட்டுண்டு இருந்தா. பக்கத்துல இருந்த மாமா பரவால்லை சும்மா பண்ணுங்கோ சீக்கரமே குட் நியூஸ் வரும்னு சொல்லி உள்ள அனுப்பிட்டார். மஸ்கட்லேந்து வந்த ஒரு மாமி அந்த ஊர் ஞாபகத்துல ரிவர்ஸ்ல சுத்திண்டு இருந்தா. நாந்தி முடியர்துக்குள்ள போதும் போதும்னு ஆயிடுத்து. இவா எல்லாரும் பண்ணின குழப்பத்துல வாத்யாருக்கு வசுருத்ர ஆதித்ய ஸ்வரூபமே மறந்து போயிடுத்து.
மத்யானம் சாப்பாடுக்கு அப்புறம் ஒரு குட்டி தூக்கம் போட்டுட்டு சாயங்காலம் நேர திருவாணைக்கா அகிலாண்டேஸ்வரி கோவிலுக்கு போயிட்டேன். ரெண்டு நாள் முன்னாடி அக்னி ஸ்தலமான அருணாசலம் இன்னிக்கி ஜலஸ்தலமான ஜம்புகேஸ்வரம் தரிசனம் ஆச்சு. கோவில் தோட்டத்துல யானை குளிக்கர்துக்கு ஒரு தொட்டி கட்டி வச்சுருக்கா அதை போய் பாத்துட்டு வந்தேன். அங்கேந்து நேரா மண்டபத்துக்கு திரும்பி வந்தா எல்லாரும் மண்டபத்துக்கு வாசல்ல ஒரே ஆட்டம் பாட்டம் கொண்டாட்டம். காத்தால சாதுவா இருந்த அமெரிக்கா மாமா இப்ப அருள் வந்த மாமா மாதிரி ஆடிண்டு இருந்தார். மாப்பிள்ளையாத்துல பெண்களூர் பக்கம் அப்பிடிங்கர்தால ஹிந்தி பாட்டு கொஞ்சம் ஜாஸ்தியா இருந்தது. சிலபேர் இடுப்பும் நோகாம காலும் நோகாம இப்ப வரும் ரஜினிகாந்த் மாதிரி நளினமா ஆடிண்டு இருந்தா. ரெண்டு சம்பந்தியும் சேர்ந்து ஜோடியா ஆடினா. 'மாலை டம்டம் மங்கள டம்டம் பாட்டு போடுங்கோ'னு ஒரு மாமி சவுண்ட் குடுத்தா. எல்லாம் ஆடி முடிஞ்சு ஒரு வழியா மண்டபத்துக்குள்ள போனதுக்கு அப்புறம் நிறைய தோஹா நண்பர்களை பாக்க முடிஞ்சது. யாரோ ஒரு மாமா “இவர்தான் என்னோட மூத்த மாப்பிள்ளை. கலிபோர்னியால இருக்கார். கூகிள்ல வேலை பாக்கரார். கிட்டத்தட்ட கலிபோர்னியா ஆப்ரேஷன்ல நம்பர் டூ பொஷிஷன்ல இருக்கார்”னு நீட்டி முழக்கிண்டு இருந்தார். அப்போ கலிபோர்னியா Google ல ரெண்டாவது ஓ இவர்தான்னு சொல்லுங்கோனு இன்னொரு மாமா கடிஜோக் அடிச்சுண்டு இருந்தார். ‘முன்னாடி மாதிரி கூகிள்ல தேடினா எதுவும் வரமாட்டேங்கர்தே?’னு ஒரு மாமி அந்த கூகிள் மாப்பிள்ளைட்ட ரொம்ப குறைபட்டுண்டா. அமெரிக்காகாராளுக்கே உரித்தான பொருவிளங்கா உருண்டையை வாய்ல இடுக்கிண்டே பேசும் இங்கிலீஷ்ல It depends upon the search algoritham னு அவர் சமாளிக்க ஆரம்பிச்சவுடனே மாமனாருக்கு பெருமை பிடிபடலை. ஒரு வழியா பெரிய நிச்சயதார்த்தம் முடிஞ்சு எல்லாரும் சாப்பிட போனா. சாப்பாடு பிரமாதமா இருந்தது. எல்லாம் பரிமாறினதுக்கு அப்புறம் ஒரு போட்டோ எடுத்து தங்கமணிக்கு அனுப்பி வம்புக்கு இழுத்தேன். ‘எங்காத்து வத்ஸலாவுக்கு பாக்கறோம்!’ ‘வெங்கி இப்ப எம் எஸ் பண்ணின்டு இருக்கான்!’ ‘கமலா ஹாரிஸ் நம்ப ஊர் பக்கம்தான் தெரியுமோ!’ மாதிரியான சம்பாஷனைகள் போயிண்டு இருந்தது. ராத்ரி தூங்க போன போதுதான்...
9 comments:
வழமை போல தக்குடுவின் கலக்கல் ஆட்டம்! அடித்து ஆடி இருக்கீர் ஓய்! ரசித்தேன். தில்லி பயணம் குறித்து இன்னும் எழுதவே இல்லை போல!
ரசித்துப் படித்தேன். சால பாக உந்தி!
Kalakkitta Thakkudu. Unnoda nadai still on. Keep it up.
வாவ்! நிறைய எழுதுங்கோ தக்குடு. ஃபேஸ் புக் ஃபுல்லா ஒரே அரசியல், சினிமா தான். இந்த மாதிரி போஸ்ட் எல்லாம் ரொம்ப மிஸ்ஸிங். அன்னிக்கு ரங்கா போஸ்ட்ல கூட நீங்க போஸ்ட் போடுங்கோன்னு எழுதினேன்.
ஆமாம் எங்க ஊர் அக்ரஹாரத்துலேயும் நீங்க சொல்லுற மாதிரி தான் இருக்கு. ராமநமின்னா அப்படி எனெர்ஜெட்டிக்கா இருக்கும். என்னமோ ஒரு சேர எல்லர் வீட்டிலேயும் கல்யாணம் வந்த மாதிரி. இப்ப எல்லாம் போச்சு😥😥
கிரி.என்னும் பையனை சுத்தணும், கடை கடையாக கும்பிடு!! ச்செம தம்பி
Superda Ganesa
@டில்லி அண்ணாச்சி- டில்லி போஸ்ட் அடுத்தாப்ல வருது
@ Anonymous- நன்றி 🙂
செம்ம; இன்னும் இந்த பெண்களூரை விட்ல்லயா நீங்க
Post a Comment
யெச்சுஸ்மி, comment பொட்டி இங்க இருக்கு.....:)