Thursday, September 22, 2022

பயணமும் ஊர் வம்பும் (Part 2)

 

“எழுந்திரிங்கோ! எழுந்திரிங்கோ! ஊர் வந்தாச்சு!”னு தங்கமணி பின்சீட்லேந்து தட்டினா. உண்மையாவே ஊர் வந்தாச்சு  போலருக்குனு கண்ணு முழிச்சு பாத்தா இந்தியாவுக்கு உள்ள தான் ப்ளைட் நுழைஞ்சுருக்கு. அதுக்குள்ள எழுப்பியாச்சு. தங்கமணிக்கு தூக்கம் வரலைனா பக்கத்துல இருக்கும் என்னையும் தூங்கவிடமாட்டா. ‘எங்கேந்துதான் தூக்கம் வருமோ? அதான் மூனுமணி நேரம் தூங்கியாச்சே போதும்! என்னோட பேசிண்டு வாங்கோ’னு சொன்னா. பகவத்கீதா பத்தி உங்களுக்கு என்ன தெரியும்?னு ஆரம்பிச்சா. எனக்கு எங்க தெருல இருக்கும் டாக்டராத்து கீதாதான் தெரியும் அதனால நீயே சொல்லுனு சொன்னேன். ‘ஒருத்தர் இருக்கார் அவருக்கு பகவத் கீதால இருக்கும் எல்லா ஸ்லோகமும் மனப்பாடமா தெரியும். எல்லா அத்தியாயத்திலையும் அவருக்கு தெரியாத விஷயமே கிடையாது, நீங்க ஸ்லோகம் சொன்னா அவர் அதுக்கு அர்த்தம் சொல்லுவார், நீங்க அர்த்தம் சொன்னா அதுக்கு உண்டான ஸ்லோகத்தை சொல்லுவார்.கின்னஸ்லேந்து வந்து அவரோட ஞாபகசக்தியை சோதிச்சு பாத்துட்டு உலக சாதனையாளர்னு சர்டிபிகேட் கொடுத்து கெளரவம் பண்ணியிருக்கானா பாருங்கோளேன்’னு சொல்லிண்டே வந்தா. நானும் அரைதூக்கத்துல இருக்கர்தை கண்டுபிடிச்சுடாம இருக்கனுமேனு ‘ம்ம்’ கொட்டிண்டே வந்தேன். ‘ஆனா இதுல ஆச்சரியமான விஷயம் என்ன தெரியுமோ’னு தங்கமணிமறுபடியும் ஆரம்பிக்கும்போது ‘நான் சொல்லட்டுமா’னு கேட்டேன். சந்தேகத்தோட ‘சொல்லுங்கோ!’னு சொன்னா. ‘அந்த பகவத்கீதா மாமா கல்யாணமே பண்ணிக்காத கட்டைபிரம்மச்சாரி, அவருக்கு குழந்தை/குட்டி எதுவுமே கிடையாது கரெக்டா?’னு கேட்டுட்டு தங்கமணியை பாத்தேன். மேடத்துக்கு பயங்கர ஆச்சரியம் ‘எப்பிடி கரெக்டா சொன்னேள்? உங்களுக்கு ஏற்கனவே அவரை பத்தி தெரியுமா?’னு கேட்டா.’அதெல்லாம் ஒன்னும் இல்லை’னு நான் சொன்னேன். ‘பொய் சொல்லாதீங்கோ! எதாவது நியூஸ்ல படிச்சுட்டு எப்பொதும் போல கமுக்கமா என்கிட்ட வந்து கதையளக்காதீங்கோ!’னு சொன்னா.

 

‘எங்க ஊர் வாய்க்கால் மேல சத்தியமா அவர் யாருன்னே எனக்கு தெரியாது’னு நான் சொன்னேன். ‘அப்ப எப்பிடி கரெக்டா சொன்னேள் சொல்லுங்கோ!’னு தங்கமணி விடவேயில்லை. ‘எல்லாம் ஒரு அனுமானம் தான், அவருக்கு மட்டும் கல்யாணம்னு ஒன்னு ஆகி தங்கமணி வந்துருந்தாங்கன்னா அவங்கள சமாளிக்கவே அவருக்கு ஒரு ஆயுசு பத்தாது, அப்புறம் எங்கேந்து விபூதி யோகம், ராஜயோகம் எல்லாம் மனப்பாடம் பண்ண, நேரா பதினெட்டாவது யோகமான மோக்ஷ யோகம் தான், புள்ளைகுட்டியும் இருந்தா அவ்வளவு தான் ஜோலி முடிஞ்சது. அதனால தான் அவர் சிங்கிள் சிங்கமா இருக்கனும்னு யூகிச்சேன்’னு சொல்லிட்டு பக்கத்துல பாத்தா தங்கமணி அந்த பக்கமா திரும்பிண்டு ‘கொஞ்ச நேரம் நானும் தூங்கரேன் நீங்களும் தூங்குங்கோ’னு சொல்லிட்டா. நாம நியாய தர்மத்தொட பேசினா பதிலே வராது. கடைசியா பைலட் மாமா “எல்லாரும் சீட்டை கெட்டியா பிடிச்சுக்கோங்கோ! நாங்க ப்ளைட்டை கீழ இறக்கப் போறோம்னு சொல்லிட்டார். எல்லா குழந்தேளும் வானத்துல வண்டி பறந்துண்டு இருக்கும் போது ஒன்னும் தூங்காது. நை நைனு அழுதுண்டே இருக்கும் இல்லைனா முழு அகலத்துக்கு கண்ணை முழிச்சுன்டு படம் பாத்துண்டே வரும் ஆனா ப்ளைட் கீழ இறங்கும் சமயம் சொல்லி வச்ச மாதிரி எல்லாம் விழுந்து விழுந்து தூங்கும். மேல வச்ச பெட்டியை நாம தட்டுத்தடுமாறி தேடிண்டு இருக்கும் போது “பையன தூக்குங்கோ! தூங்கரான் பாருங்கோ!”னு தங்கமணி நம்பளை பிடுங்க ஆரம்பிச்சுடுவா.   




 

இந்த இமிக்ரேஷனுக்கும் லக்கெஜுக்கும் எப்பொதும் ஏழாம் பொருத்தம் தான். நாம போயி இமிக்ரேஷன்ல நிக்கும் போது தான் லண்டன், ஜெர்மனி, சவுத் ஆப்பிரிக்கானு எல்லா ப்ளைட்டும் வந்துடும். எல்லாரும் போய் இமிக்ரேஷன்ல போய் மொத்தமா நிக்கும் போது திருப்பதி தேவஸ்தானத்துல பிரம்மோத்ஸவ தரிசனத்துக்கு நிக்கர மாதிரியே இருக்கும். அதுலையும் எந்த வரிசைல போய் நிக்கர்துன்னு ரெண்டு நிமிஷம் யோசிச்சு ஒரு கட்டம் போட்ட சட்டை அணிந்த சுப்பிரமணியம் கவுண்டர் வரிசையை தேர்ந்தெடுத்து  நிக்க ஆரம்பிச்சு  ‘அப்பாடா’னு நாம பெருமூச்சு விடும்போது சொல்லிவச்ச மாதிரி நம்ப வரிசை நகரவே நகராது. “பெரிய புத்திசாலி மாதிரி இந்த வரிசைக்கு வந்தேள், நமக்கு அப்புறம் வந்த மஞ்ச கலர் சுடிதார் பேமிலி எல்லாம் பக்கத்து வரிசைல நகந்து போயாச்சு”னு தங்கமணி சொல்லும்போது நம்ம வரிசை இன்னும் நகரலையேனு ஒரு பக்கம் வருத்தம் இருந்தாலும், ‘எந்த மஞ்ச கலர் சுடிதாரை சொல்லரா நாமா பாக்கவே இல்லையே’னு கொஞ்சம் வருத்தமா ‘வடை போச்சே!’ வடிவேல் மன நிலைல இருப்போம். ‘என்ன பண்ண சொல்லு நான் எடுக்கர முக்கியமான முடிவுகள் எல்லாமே சொதப்பலாதான் இருக்கு. கல்யாணத்துக்கு பொருத்தம் பாக்கும் போது கூட’னு நாம ப்ளோவா பேசும் போது ‘வரிசை நகந்தாச்சு முன்னாடி போங்கோ’னு பேசர்தை கவனிக்காத மாதிரியே முகத்தை வச்சுண்டு தங்கமணி ஆட்டையை கலைச்சு விட்டுடுவா. கவுண்டர்ல போய் நின்னதும்...... (பயணம் தொடரும்)

5 comments:

Anonymous said...

பேஷ் பேஷ்

அப்பாவி தங்கமணி (சஹானா இணைய இதழ்) said...

செம்ம flow as always 😀. அதுவும் அந்த மோட்ச யோகம் மேட்டர் 🤣

Srinivasan J said...

Same feelings ❣️ என்ன பண்ண சொல்லு நான் எடுக்கர முக்கியமான முடிவுகள் எல்லாமே சொதப்பலாதான் இருக்கு

தக்குடு said...

Thanks a lot

TRC said...

ஆஹா பேஷ்

Post a Comment

யெச்சுஸ்மி, comment பொட்டி இங்க இருக்கு.....:)