Part I நானும் என்னோட நண்பனும் முன் பக்கமும் பின் பக்கமுமா சரி பண்ணி உக்காந்து பாத்தும் மனசுக்கு திருப்தியாவே இல்லை. நாங்க சரி பண்ணி உக்காசுக்க ட்ரை பண்ணிண்டு இருக்கும் போதே யானை மெதுவா நகர ஆரம்பிச்சது. எங்க ரெண்டு பேருக்குமே வயத்தை கலக்க ஆரம்பிச்சது. என்னோட கைல வெள்ளிக்குடம், அவனோட கைல ஒரு பெரிய கோவில் குடை. நான் மெதுவா யானையோட கழுத்துல இருந்த ஒரு பள்ளத்துல குடத்தை வச்சுண்டு நன்னா கெட்டியா கட்டிப்புடிச்சுண்டேன்.

யான் ஏறிய யானை!!..:)
ஒரு கையால யானை மேல போர்த்தி இருந்த துணியை பிடிச்சுண்டேன். அந்த சமயம் பாத்து வெடிக்காரன் ஒரு வெடியை கொளுத்தி வானத்துல விட்டான். 'டமால்'னு அது வெடிக்கவும் யானையோட நடைல ஒரு அதிர்வு தெரிஞ்சது. நாங்க ரெண்டு பேரும் பயந்து போய்ட்டோம். என்னல ஆச்சு யானைக்கு?னு என்கிட்ட கேட்டான். ‘யானை மனசுக்குள்ள சிரிக்கர்து போலருக்கு!’னு நான் பதில் சொன்னேன். இது வரைக்கும் ஒழுங்கா போயிண்டுருந்த யானையோட நடைல ஒரு வித்தியாசம் தெரிஞ்சது. வலது பக்க முன்னங்காலை ஒருமாதிரி வட்டம் போட்டு வட்டம் போட்டு நடந்தது. என்னடா மாப்ள இது!னு மறுபடியும் குடைக்காரன் தொணதொணத்தான். யானை ஓ! போடுதுடா மாப்ள!னு நான் பதில் சொல்லிண்டே கீழ இருந்த யானைப் பாகன்ட என்ன ஆச்சு?னு விசாரிச்சேன். ‘ஒன்னும் இல்லை தம்பி! முன்னங்கால் முட்டி கொஞ்சம் தேஞ்சுருக்கு, அதனால யானை இப்படித்தான் நடக்கும்!’னு சாதாரணமா பதில் சொன்னார். ‘இதெல்லாம் ஏறர்த்துக்கு முன்னாடி சொல்லமாட்டேளாடா!’னு மனசுக்குள்ள சொல்லிண்டேன்.

ஆரம்பமெல்லாம் நன்னாதான் இருக்கு...:)
இதுக்கு நடுல கூட வந்துண்டு இருந்த ஒரு மாமா, ‘ஸ்வாமியோட விஷேஷமே தனிதான்! கணபதி பிரணவ ஸ்வரூபம் இல்லையா, அதான் காலால ‘ஓம்’ போட்டு காமிக்கர்து யானை!’னு பிட்டு போட்டு மத்த மாமாக்களை உச்! கொட்ட வெச்சுண்டு இருந்தார். ‘மாமா! அடுத்த திருப்பத்துல நான் கீழ இறங்கிக்கறேன், நீங்க மேல வாங்கோ! மேலேந்து பாத்தா ‘ஓம்’ இன்னும் தெளிவா தெரியும்!’னு நான் சொன்னதுக்கு அப்பரம் பேசாம வந்தார். நேரம் ஆக ஆக எனக்கு பயம் ஜாஸ்தியாயிண்டே போச்சு. 'யானை சவட்டியதில் பச்சிளம் பாலகன் தக்குடு சட்னி'நு எதுகை மோனையோட தினமணில செய்தி வந்துருமோ?னு பயமா இருந்தது. வயிற்றுக்கும் தொண்டைக்கும் நடுல ஒரு உருண்டை தான் வைரமுத்துவுக்கு உருண்டது, ஆனா எனக்கு 2 - 3 உருண்டை உருள்ற மாதிரி இருந்தது.
கணபதி உபனிஷத்ல ஆரம்பிச்சு ருத்ரம் சமகம்னு எல்லா ஸ்லோகமும் சொல்ல ஆரம்பிச்சேன். கணபதி பஞ்சரத்னம் மட்டும் சொல்லலை, ஏன்னா அதை சொன்னா பிள்ளையார் 'பாபா ப்ளக்க்ஷிப்' ரைம்ஸுக்கு குட்டிக் குழந்தேள் தலையை ஆட்டிண்டு ஆடரமாதிரி சந்தோஷமா ஆடிண்டே கேப்பாராம். அப்பரம்
திவா அண்ணா ப்ளாக்ல இருக்கும் யானை மாதிரி குதிக்க ஆரம்பிச்சுதுன்னா என்ன பண்ணர்து! அதனால சொல்லலை.

பப்பு டார்லிங் ரெடி ஆயாச்சு!!..:)
ஒரு வழியா குத்துக்கல் தெருவுக்குள்ள வந்தாச்சு, அங்க இருந்த ஒரு பாலக்காட்டு மாமி ஆர்த்தி(ஆர்த்தி யாரு? நம்ப பாலக்காடு மாமியோட ஒரே பொண்ணா?னு வளிச்சுண்டு வந்து யாரும் சந்தேகம் கேக்காதீங்கோ!) எடுத்துட்டு சும்மா இருக்காம, ‘தக்குடு! ஆனன மேல உன்னைகாண்ரோது பந்தளராஜகுமாரனாட்டம் இருக்கை கேட்டையா!’னு போட்டா பாக்கனும் ஒரு பிட்டை. யானை எப்ப பந்தாடப்போர்தோ?னு பயந்துண்டு இருந்த நான் உடனே, ‘மாமி! ஆரத்தி தட்டை தள்ளி வெச்சுக்கோங்கொ! ஆரஞ்சு கலர் ரஸ்னா ஜூஸ்!னு நினைச்சு, ‘ஐ லவ் யூ ரஸ்னா!’னு சொல்லிட்டு யானை தும்பிக்கையால உறிஞ்சுடப்ப்போர்து!’னு சொன்னேன். ‘மாமி! நான்! நான்! எப்பிடி இருக்கேன்?னு சொல்லலையே?’னு குடைக்காரன் ஆரம்பிச்சான். ‘பரக்காதடா பரக்காவட்டி! நீ பந்தளராஜாவுக்கு குடை பிடிக்கரவன் மாதிரி லக்ஷணமா இருக்கை போதுமா!’னு அவனை சமாதானம் பண்ணினேன். இதுக்கு நடுல ஒரு நாதாரிப்பய சரவெடியை கொளுத்திப் போட்டு யானையை பதறடிக்க முயற்சி செஞ்சுண்டு இருந்தான்.
சன்னதி தெருல ருக்கு மாமி பாகன் கிட்ட மெதுவா, ‘யேன்டாப்பா! உன்னோட யானை கிருஷ்ண ஜெயந்தி பக்ஷணம் எல்லாம் சாப்டுமா?’னு விசாரிச்சுண்டு இருந்தா. நான் உடனே சுதாரிச்சுண்டு, ‘அதெல்லாம் நாங்க கீழ இறங்கினதுக்கு அப்பரம் தெருல வந்து குடுத்துக்கோங்கோ மாமி!னு சொல்லிட்டேன். அவாத்துல கிருஷ்ண ஜெயந்தி பக்ஷணம் எல்லாம் பாமாயில்லதான் பண்ணூவா. கண்றாவியா இருக்கும், வாயிலையே வெக்க முடியாது. கேட்டா, கிருஷ்ணருக்கு பாமாவைத்தான் ரொம்ப பிடிக்கும்டா கோந்தை!னு ஒரு நொண்டிச் சாக்கு சொல்லுவா. அவாத்துல யாரும் சாப்டாத பழைய பக்ஷண ஸ்டாக் எல்லாத்தையும் யானைட்ட குடுத்து க்ளியர் பண்ண பாக்கரா. அவாத்து மைசூர்பாவை வச்சு வாய்க்காலுக்கு சைடுல வெள்ளத் தடுப்புச் சுவரே கட்டிடலாம் அவ்ளோ ஸ்ட்ராங்! இதை எல்லாம் திண்ணுட்டு யானைக்கு எதாவது ஆச்சுன்னா அப்பரம் சேதாரம் எங்களுக்குத்தான்.
‘முடுக்கு’மூச்சா மாமா(அவாத்துல 3 டாய்லட் இருந்தாலும் அவர் மட்டும் முடுக்குல போய்தான் எல்லாம், அதனால இந்த பேர் அவருக்கு) ரொம்ப நாழியா யானை பின்னாடி & சைடுல வந்துண்டே இருந்தார். அடிக்கடி யானையோட வாலை பாத்துண்டே இருந்தார். இதை நான் கவனிச்சுட்டு ‘என்ன சமாசாரம் மாமா?’னு கேட்டதுக்கு, மோதரம் பண்ணி போட்டுக்க நீளமான ஒரு யானை முடியை புடுங்கர்த்துக்கு வால்ல தேடிண்டு இருக்கேன்டா கோந்தை!!னு சாதாரணமா சொன்னார். “@#%ரை புடுங்கர்த்துக்கு இதுவாவோய் நேரம்?”னு துபாய் பார்ட்டி நல்ல திட்டிவிட்டுட்டான்.
இதுக்கு நடுல என்னோட வேட்டி முடிச்சு என்னை மாதிரியே ரொம்ப லூசா இருந்தது. வேட்டியை இழுத்துகட்டனும்னா கும்பத்தை கீழ குடுத்தா தான் கட்டமுடியும். கீழ இருந்த கோவில் தர்மகர்த்தா கரகாட்டக்காரன்ல வரும் கனகாவோட அப்பா சண்முகசுந்தரம், “அம்மாடி காமாட்சி! இந்த கரகத்தை ஆட்டம் முடிஞ்சுதான் கீழ இறக்கனும்!”னு கனகாகிட்ட சொன்ன மாதிரி “கும்பத்தை கோவில் வாசல்லதான் இறக்கனும்!”னு உறுதியா சொல்லிட்டார். கோவில் வாசல்ல கும்பல் கும்பலா மடிசார் பொம்ணாட்டிகளும் அவாத்து பிகர்களும் நின்னுன்டு இருந்தா. எல்லாரும் ஆளுக்கு ஒரு ஜிமிக்கியை போட்டுண்டு மினிக்கிண்டு இருந்தா அவா எல்லார் முன்னாடியும் அவுந்த வேட்டியோட ‘சூப்பர்மேன்’ கோலத்துல(வேட்டியை கழுத்துல கட்டிண்டு குதிச்சா சூப்பர்மேன் தானே?) நிக்கப் போறேன்!னு மனசுக்குள்ள பயந்துண்டு இருந்தேன்.

தக்குடு 3 வருஷத்துக்கு முன்னால்...:)
போட்டோகாரன்கிட்ட யானை மேலேந்து இறங்கும் போது ஒரு ஸ்பெஷல் போட்டோ எடுத்து தாங்கோ!னு சொல்லியிருந்தேன், அதனால அவர் ஜூம்பண்ணர காமிராவோட ரெடியா இருந்தார். ‘சூப்பர்மேன்’ கோலம் அமெரிக்கா வரைக்கும் போகப்போகர்து!னு மனசுக்குள்ள ஒரே பதட்டம். ஒரு வழியா கோவில் வாசலும் வந்தது. வெள்ளிக் குடத்தை ஒரு மாமாட்ட குடுத்துட்டு மெதுவா கீழ இறங்கி பாஞ்சாலி மாதிரி ஒரு கையால அவுந்த வேட்டியை பிடிச்சுண்டு மின்னல் வேகத்துல ‘துபாய்’ காந்தி மாமியாத்துக்குள்ள புகுந்துட்டேன். அப்பரம் வந்து சொன்ன பேச்சை காப்பாத்தின யானையை ஒரு பிரதக்ஷிணம் பண்ணிட்டு தும்பிக்கையை தொட்டு வணங்கி ஷாஷ்டாங்கமா ஒரு நமஸ்காரமும் பண்ணினேன்.
இந்த வருஷம் தர்மகர்த்தா பூ மாலையை கைல வெச்சுண்டு, தக்குடு!னு கூப்டவுடனே S.V. சேகர் நாடகத்துல கதாபாத்திரங்கள் 'டஷ்ஷ்ஷ்ஷ்'னு காணாம போகர மாதிரி காணாம போய்ட்டேன். யானை மேல ஆள் ஏறினதுக்கு அப்பரம் தான் பக்கத்துலையே போனேன். துபாய் பார்ட்டி ஆத்தங்கரைக்கே வரலை, ‘தெருலயே நான் இருக்கேன்!’னு சொல்லிட்டான்