Thursday, August 14, 2025

ஊருக்கு போலாமா?

எல்லாரும் செளக்கியமா இருக்கேளா? ‘என்னடா இது தக்குடுவை ஆளையே காணுமே’னு தேடினவா தேடாதவா எல்லாருக்கும் நன்றிகள். போன மாசம் ஜூலைல கல்லிடை காஸ்மோபொலிடன் கோவில் கும்பாபிஷேகம். அதனால குடும்பம்/குட்டியோட பொட்டியை தூக்கிண்டு கிளம்பி வந்தாச்சு. சாயங்காலம் வில்லுப்பாட்டு ராத்ரி திண்டுக்கல் ரீட்டா ஆடல்/பாடல் கச்சேரினு ஊர்ல நிகழ்ச்சி நிரல் இருக்கர மாதிரி வழக்கம் போல ஏர் அரேபியால டிக்கெட்டை போட்டாச்சு. கத்தார் ஏர்வேஸ் ப்ளைட்ல சாப்பாடு நன்னா இருக்கும் தான்சென்னைலேந்து வரும் போது காத்தால சுடசுட பொங்கலும் ஓட்டை வடையும் தருவா தான் ஆனா டிக்கெட் ரூபாய் பட்ஜெட்ல ஓட்டை போடர்தால சார்ஜாவுக்கு போய் கனெக்டிங் வண்டியை பிடிக்கலாம்னு தங்கமணியை தாஜா செய்வது கொஞ்சம் கடினமா இருந்தது. இருந்தாலும் சப்புசவரு சாமான் விக்கும் அமேசான்/ மீஷோ / ஜுடியோனு எல்லாத்துலையும் அஞ்சு எக்ஸ்ட்ரா ஆர்டர் என்ற நிபந்தனையின் அடிப்படையில் இறுதி முடிவு எட்டப்பட்டது. ஷார்ஜால எங்களுக்கு ஒரு ஆஸ்தான பாத்ரூம் உண்டு. எல்லாரும் அந்த பக்கம் வரமாட்டா. ‘போன தடவை கதவு கைபிடி ஆடிண்டு இருந்ததே?’ ‘உன்னோட தங்கச்சிக்கு கல்யாணம் நல்லபடியா ஆச்சா?’னு செளஜன்யமா அங்க இருக்கும் சிங்கள ஊழியரிடம் குசலம் விசாரிக்கும் அளவுக்கு அந்த பாத்ரூம் எங்களுக்கு நெருக்கம். பாத்ரூமுக்கு இவ்ளோ பில்டப்பானு நினைக்க கூடாது. சில ஏர்போர்ட் பாத்ரூம்லாம் உள்ள போனா நீச்சல் குளம் மாதிரி தரையெல்லாம் ஜலப்ரவாஹமா இருக்கும். உச்சா போனாளா இல்லை ஸ்னானம் பண்ணினாளானே கண்டுபிடிக்க முடியாது. இதுக்குள்ள நாம போயிட்டு வெளில வரும்போது டயப்பர் ஒழுங்கா கட்டாத குழந்தையோட டவுசர் மாதிரி நம்ம டிரெஸ் தொப்பலா நனைஞ்சு இருக்கும். அதெல்லாம் இல்லாம இந்த பாத்ரூம் அனாதரட்சகனாக இந்த முறையும் காப்பாத்திவிட்டது. மெட்ராஸ் ஏர்போர்ட்ல வேற மாதிரி தலைவலி அங்க ஒரு பயலும் தண்ணியே விடமாட்டான். விக்கரவாண்டி பஸ்ஸ்டாண்ட் மாதிரி கமகமா குமுகுமுனு நாத்தம் பிடிச்சு நாறும். இப்ப கொஞ்சம் சுத்தமா இருக்கு.

 




சென்னையில் மாமனார் வீட்டில் எப்போதும் என் மீது ஒரு ஆவலாதி உண்டு. ரெண்டு நாளைக்கு மேல இங்க தங்கவே மாட்டார். தங்கினாதான் என்ன?னு தங்கமணியிடம் சொல்லுவா. நானும் காதுல விழாத மாதிரியே இருந்துட்டு கல்லிடை ஓடி போயிடுவேன். மாமியார் வீட்டில் சாம்பாரின் ஸ்வரூபம் ரசமாக மாறுவதர்க்கு முன்னாடி இடத்தை காலி பண்ணுவது நம்முடைய பாலிசி. இந்த முறை அவாளோட மனசையும் சந்தோஷப் படுத்தரமாதிரி கூட ஒரு நாள் தங்கிட்டு அப்பிடியே தங்கமனி குடும்பத்துடன் போய் காளஹஸ்தி தரிசனம் பண்ணலாம்னு கிளம்பியாச்சு. கூகிள் மேப்ல சென்னைக்கு மிகமிக அருகில்னு தான் காட்டர்து ஆனா கார்ல போகும் போது போயிண்டே இருக்கு. போகும் வழி எங்கும் மாமரங்கள் காய்ச்சு குலுங்கிண்டு இருந்தது. மத்யானம் சாப்பாடு முடிஞ்சு ஒரு மணிக்கு சென்னைலேந்து கிளம்பினதால தூங்கிண்டே போய் சாயங்காலம் கோவில் வந்துருத்து. கார்ல போகும் போதே ‘என்ன திடீர்னு காளஹஸ்திஅதான் உங்களுக்கு கல்யாணம் நல்லபடியா ஆயாச்சே’னு மாமனார் என்னோட வாயை பிடுங்கினார். ‘ராகு கேதுவுக்கு பயந்து அங்க போகலை! ஏற்கனவே ரெண்டுக்கும் நடுல தான் சிக்கி இருக்கேன்’னு நான் சொல்லும்போது என்னோட வலது பக்கம் தங்கமணியும் இடது பக்கம் மச்சானும் உக்காந்து இருந்தது எதேச்சையான ஒரு நிகழ்வுனு நான் சொன்னா நீங்க நம்பவா போறேள். காளஹஸ்தி பஞ்சபூத ஸ்தலங்களில் வாயு ஸ்தலம். போன லீவுல ஜம்புகேஸ்வரமும்(திருவானைகோவில்) அருணாசலமும் தரிசனம் ஆயிடுத்து அதனால இந்த முறை காளஹஸ்தி தரிசனம் பண்ணனும்னு மனசுல ஒரு ஆசை. குடும்பத்தோட போய் கும்புடு போட்டதுல ரொம்ப சந்தோஷம். கோவிலுக்கு வெளில வந்து ஒரு கடைல எல்லாரும் ஏலக்காய் மணக்க டீ குடுச்சோம். சிந்தூர கலர்ல பக்கத்துலயே பஜ்ஜி பொரிச்சுண்டு இருக்கர்தை பாத்த உடனே என்னோட மாமியாருக்கும் மச்சானுக்கும் நாக்குல ஜலம். ‘ஆந்திரால சமையலுக்கு மிளகாய் போடமாட்டாமிளகாய்லதான் சமையலே பண்ணுவா அப்புறம் போகர வழில பத்துகிலோமீட்டருக்கு ஒரு தடவை நிப்பாட்டி மாந்தோப்புல பப்புசெட்டு இருக்காஅதுல தண்ணி வருமா?னு தேடவேண்டிய நிலைவந்துடும்’னு தங்கமணி பயம்காட்டினதால பேசாம இருந்தா.




 

கார்ல வரும்போதே செல்வம் டிராவல்ஸ் ஏஜென்ட் அண்ணாச்சிக்கு ஒரு போனை போட்டு ‘டிக்கெட்டை போடுங்க அண்ணாச்சி! பெருங்குளத்தூர்ல ஏறிக்கிடுதேன்!’னு நான் சொல்லும்போதே ‘நீங்க ஆவணிலலா வருவேள்! ஆனி மாசமே காத்தடிக்கி! கும்பாபிஷேகத்துக்கு வாரேளோவீட்டம்மா குழந்தேள்லாம் கூட்டு வரலையா?’னு ஜாரிச்சார் அண்ணாச்சி. ‘அவாள் விஷேஷத்தை ஒட்டி வரா நான் கொஞ்சம் முந்தி வாரேன்’னு சொல்லிட்டு கால் கட்பண்ணும் போது என்னோட தெய்வத்தின் தெய்வம் (அதான் மாமனார்) ஆச்சரியமாக என்னை பாத்துண்டே 'அது எப்பிடி மாப்ளே! உங்க ஊர் ஆட்கள் யாருமே ஆன்லைன்ல டிக்கெட் போடாம போன்லையே வேலையை  முடிக்க பாக்கரேளே’னு கேட்டார். ஆன்லைன்ல போட்டர்தவிட ஆள்மூலமா போட்டா நமக்குதான் நல்லது. ஏஜெண்ட் அண்ணாச்சி டிரைவருக்கே போனை போட்டு ‘நம்ம கல்லிடைகுறிச்சி சாமி கத்தார்லேந்து கோவிலுக்கு வாராரு! பெருங்குளத்தூர்ல அவரை ஏத்தாம வண்டி நவழக்கூடாது பாத்துக்கோ!’னு சொல்லிடுவார். டிக்கெட் ரூபாயும் ஊர்ல போய் இறங்கிட்டு கடைல போய் குடுத்தா போதும். ‘நீங்க எங்க போவப்போரீக நான் எங்க போவப்போறேன்’னு ஏஜெண்ட் அண்ணாச்சி சொல்லுவாரு. திருனெல்வேலி பக்கம் வாக்கு சுத்தம் அதிகம். சொன்னா சொன்ன சொல் மாறாது’னு சொன்னேன். அடுத்த நாள் சாயங்காலம் சொன்ன மாதிரியே பெருங்குளத்தூர்ல வண்டிய புடிச்சு ஏறியாச்சு. அழகென்ற சொல்லுக்கு முருகா!னு டி எம் எஸ் கூட சேர்ந்து கிடாமீசை வச்ச டிரைவரும் சேர்ந்து உருகிண்டு இருந்தார். ‘நல்லா இருக்கேளாசுவம் தானாவீரபாகுத்தேவரே வந்து வட்டை பிடிச்சு வண்டியோட்ர மாதிரிலா இருக்கு?னு விசாரிக்கும் போது அவர் முகத்துல புன்னகை. என்னதான் சொல்லுங்கோ நம்ம ஊரு வண்டி நம்ப ஊர் வண்டி தான்......  (பயணம் தொடரும்)