ராத்ரி தூங்க போகும் போது கல்யாண ஆத்துக்கு வந்த ஒரு மாமா ‘காத்தால சீக்கரமே முகூர்த்தம் அதனால நீ சீக்கரம் வந்துடு கோந்தை’னு சொன்னார். நான் வாஸ்தவமா காத்தால சீக்கரம் ஸ்ரீரங்கம் கோவிலுக்கு போயிட்டு வரனும்னு நினைச்சுண்டு இருந்தேன். அதுக்காக தான் கோவிலுக்கு பக்கத்துல இருக்கும் ஹோட்டல் ரூம்ல தங்கிண்டு இருந்தேன். இப்ப இவர் சொன்னதுக்கு அப்புறம் ப்ளனை மாத்தி மண்டபம் பக்கத்துல ஏற்கனவே புக் பண்ணி வச்சுருக்கும் ஒரு லாட்ஜ்ல போயி பையை வச்சு தூங்க ஆரம்பிச்சேன். காத்தால குளிச்சுட்டு சந்தனகலர் ஜிப்பாவும் ஜரிகை வேஷ்டியும் கட்டிண்டு மண்டபத்துக்கு போயாச்சு. மண்டப வாசல்ல காசி யாத்ரை முடிஞ்சு ஊஞ்சல்ல மாப்பிள்ளை பொண்ணை உக்கார வச்சு இஸ்ரேல் லெபனான் மேல குண்டு போடர மாதிரி பச்சபுடி சுத்தி கலர்கலரா உருண்டையை வீசிண்டு இருந்தா. யாரோ ஒரு கோல்ட் ப்ரேம் கண்ணாடி போட்ட மாமி பச்சபுடி உருண்டையை காப்பர் சல்பேட் கலர் புடவை கட்டின மாமியை பாத்து யதேச்சயா வீசர மாதிரி ஆனா குறிபாத்து வீசினா.. அனேகமா அவாளோட நாத்தனாரா இருக்கும்னு நினைச்சேன். இன்னொரு மாமி போட்டோ கிராபர் மூஞ்சிக்கு ஒரு சிவப்பு உருண்டையை வீசினா. நேத்திக்கி அந்த மாமி பாலிகை தெளிக்கும் போது போட்டோ எடுக்காத கோவம் இப்ப பச்சபுடியை வச்சு புடிபுடினு புடுச்சுண்டு இருந்தா. ‘இன்னும் அரைமணி நேரம் எமகண்டம் இருக்கர்தால பாலும் பழமும் காலியாகர வரைக்கும் குடுத்துண்டே இருங்கோ’னு ஒரு திருனெல்வேலி மாமா சொல்லிட்டதால என்ன பண்ணர்துன்னு தெரியாம வாத்யார் மாமா குட்டிபோட்ட பூனை மாதிரி சுத்து சுத்தி வந்தார். லெப்ட்ல எடு! ரைட்ல எடு!னு போட்டோகிராபரை வந்தவா போனவா எல்லாம் ஏவ ஆரம்பிச்சுட்டா. இதுக்கு நடுல கமலாம்பாள் காட்டெரிங் சர்விஸ்ல காத்தால ஸ்பெஷல் என்னனு போய் பாத்துட்டு வந்த வேலையை பாப்போம்னு கொஞ்சமா ஒரு கரண்டி காசி அல்வா, ஒரு ஊத்தப்பம், ஒரு இட்லி, ஒரு ரவா தோசை, ஒரு வடை, பக்கத்து இலை மாமாவுக்காக கொஞ்சம் பொங்கல், அரைடம்பளர் காப்பியோட சமாப்தி பண்ணினேன். நான் முடிச்சு டைனிங் ஹால்லெந்து வெளில போகும் போது மாப்பிள்ளை பொண்ணு மண்டபத்துக்குள்ள கையை புடுச்சுண்டு வரர்துக்கு சரியா இருந்தது.
கல்யாணப்பொண்ணை விடவும் கீழ இருக்கரவா தான் மேக்கப்ல அசத்தரா. பவுன்டேஷன் பவுடரே நாலு கோட்டிங் அடிப்பா போலருக்கு. முன்னாடி இருக்கர முடியை பின்னாடி போட்டுக்கர்தும் பின்னாடி இருக்கர புடவை தலைப்பை முன்னாடி கொண்டு வரர்தும்னு கவுண்டமணி சொன்ன மாதிரி ‘இவளுக படுத்தரபாடு இருக்கே!’ லாக்கர்ல இருந்த காசுமாலை, கல்வச்ச அட்டியல், டெம்பிள் ஜுவல்லரினு மினுக்கிண்டு இருந்தா. புடவை ஆயிரம் ரூபாய் தான் இருக்கும் போலருக்கு ஆனா ரவிக்கை மூவாயிரம் வந்துடும் . ரவிக்கைக்கு பின்னாடி மயில் பறக்கர்து, கிளி ஆடர்து, மீன் ஓடர்துனு ஆரி ஒர்க் அமக்களப்படர்து. எவ்ளோ தையக்கூலி குடுத்தர்னு அவாத்து மாமா கிட்ட கேட்டா தெரியும். கல்யாண மண்டபத்துல போயி ஆரி ஒர்க் ஆராய்ச்சி நடந்துருக்கு போல!னு நாக்கு மேல பல்லை போட்டு யாரும் கேள்வி கேட்காதீங்கோ. வளையல் போட்டுவிடரவர், மெகந்தி போடரவர் எல்லாம் ஒரு பொன்ணு கையை பிடிச்சா கையை பிடிச்சு இழுத்தான்னு யாரும் கத்த மாட்டா. அதே மாதிரி எனக்கு பிடிக்காட்டாலும் யுவான் சுவாங் மாதிரி ஞாபகம் வச்சுண்டு உங்களுக்கு சொல்லிண்டு இருக்கேன்.. மேடைல வாத்யார் மாமா ‘பொளத்ரி நப்த்ரி’னு ஆரம்பிச்சார். சரி இப்ப போனா சரியா இருக்கும்னு மேல போனேன். பிரவரம் சொல்லி கோத்ரம் மாத்திண்டு இருந்தா. பொண்ணோட அப்பாட்ட போயி “கண்கலங்காம இருங்கோ! உங்க பொண்ணுதான் அவாத்துக்கு போறா! நீங்க என்ன அழுதாலும் உங்காத்து மாமி உங்க கூடதான் இருக்க போரா அதனால ஹெப்பியா இருக்கர மாதிரி முகத்தை வச்சுக்கோங்கோ”னு சொன்னேன். கரெக்டா மாங்கல்ய தாரணம் ஆகர சமயம் ஹோமகுண்டம் புகைய ஆரம்பிச்சுடுத்து. எல்லா இடத்துலையும் வாத்யார் இந்த ஜோலிதான் பாக்கரார். அதை கொஞ்சம் நன்னா தான் ஜுவாலை பண்ணினா என்ன. போட்டோகாரர் வந்து ‘சாமி கொஞ்சம் நெய் விடுங்கோ! புகையை போட்டா தாலிகட்டர கட்டம் ஆல்பத்துல டல்லா இருக்கும்’னு கெஞ்சிண்டு இருந்தார். ‘தூரத்துல இருக்கரவா எல்லாம் பக்கத்துல வந்து அக்ஷதையை தம்பதிகளுக்கு போட்டு ஆசிர்வாதம் பண்ணுங்கோ. எனக்கு ஆசிர்வாதம் பண்ணாதீங்கோ! என்னோட தலைல போடாதீங்கோ! காத்தால பச்சபுடி சுத்தின மாமி எல்லாம் பக்கத்துல வந்துடுங்கோ’னு வாத்யார் ரொம்ப உஷாரா எச்சரிக்கை பண்ண ஆரம்பிச்சார். ஒருவழியா அக்னி வந்துருத்து மாங்கல்ய தாரணமும் நல்லபடியா ஆச்சு. பொண்ணோட அப்பாவுக்கு ‘அப்பாடா’னு இருந்தது , மாப்பிள்ளைக்கு கை நடுங்க ஆரம்பிச்சுடுத்து, பையனோட அம்மாவுக்கு வேர்கவே ஆரம்பிச்சாச்சு. எல்லாருக்கும் தர்பூசணி ஜூஸ், சாத்துக்குடி ஜூஸ்னு பிரஷ்ஷா மிக்ஸில அடிச்சு குடுத்தா.
ஹோமம் எல்லாம் பூர்த்தியானதுக்கு அப்புறம் கோவில் பிரசாதம் & கிப்ட் கவர் வாத்யார்கிட்ட சொல்லி ஓதியிட்டோம். இதுக்கு நடுல ஒரு மாமா மேடைல என்கிட்ட வந்து ‘மத்யானம் ஸ்ரீரங்கம் கோவிலுக்கு போலாம்னு இருக்கேன் நீங்களும் என்னோட வரேளா’னு கேட்டார். ‘சத்திரத்து சாப்பாட்டுக்கு அப்பனையங்கார் உத்தரவு’ அப்பிடிங்கர கதையா இருக்கேனு மனசுல நினைச்சுண்டு ‘ஓ பேஷா போலாமே மாமா!’னு சொன்னேன். அப்பிடியும் இப்படியுமா எல்லார்கிட்டையும் ஒக்காந்து பேசிண்டு இருந்ததுல காத்தால சாப்பிட்ட டிபன் ஜீரணம் ஆயிடுத்து. மத்யான சாப்பாடுக்கு எல்லாரும் மெதுவா நகர ஆரம்பிச்சா. சாப்பாடும் பிரமாதமா இருந்தது. எல்லாத்தையும் சாப்பிட வயித்துல இடம் தான் இல்லை. சாப்பாடு முடிஞ்சு அந்த மாமா கூட கோவிலுக்கு கிளம்பியாச்சு. மாமாவும் நானும் ஒரு ஆட்டோவை புடிச்சு ரங்கா ரங்கா கோபுரம் பக்கத்துல போய் இறங்கிட்டு உள்ள போக ஆரம்பிச்சோம். உள்ள நுழையர்துக்கு முன்னாடி அங்க வாசல்ல இருந்த 'வசூல் ராஜா'(அதான் அறமில்லாத துறை) ஆபிஸ்குள்ள அந்த மாமா போனார். நானும் ரெண்டு நிமிஷம் நின்னேன் அப்புறம் என்ன ஆச்சுன்னு உள்ள போய் பார்த்தா ரெண்டு கிரவுண்ட் இடத்துல பெரிய ஆபிஸ், மொத்த ஆபிஸுக்கும் குளுகுளுனு ஏசி (எல்லாம் நாம உண்டியல்ல போடும் காசுல வந்ததுதான்). அங்க இருந்த ஒரு அதிகாரிக்கு சென்னைலெந்து ஒரு போன் கால் வந்தது உடனே அவர் எங்க கூட வந்துட்டு கொடிமரம் பக்கத்துல ஒருந்த ஒரு ஊழியரிடம் ‘இவங்களை தரிசனத்து அனுப்பி வைங்க’னு ஒரு வார்த்தை தான் சொன்னார். அதுக்கு அப்புறம் எல்லா கிரில் கேட்டும் வரிசையா திறந்தது. மூனாவது நிமிஷம் அரங்கனோட சன்னதி முன்னாடி நிக்கரோம். அரங்கனை நன்னா தரிசனம் பண்ணிண்டே புருஷ ஸூக்தம், நாராயண ஸூக்தம் எல்லாம் பாராயணம் பண்ணினேன்.வெளில வந்தா ஆச்சரியமா இருந்தது. இவ்ளோ சுலபமா தரிசனம் பண்ணக்கூடிய பெருமாளை இந்த அறம் கெட்ட துறை எவ்ளோ தூரத்துல நிப்பாட்டி வச்சுருக்கானு வருத்தமா இருந்தது. தாயார் சன்னதியிலும் அற்புதமான தரிசனம். பிரகாரத்துக்கு வந்ததுக்கு அப்புறம் அந்த மாமாட்ட “அப்பிடி என்ன தான் ஆபிஸ்லனு சொன்னேள்?”னு கேட்டா பாட்ஷா ரஜினி மாதிரி ‘உண்மையை சொன்னேன்’னு சொல்லி சிரிச்சார். எது எப்பிடியோ ரங்கனோட அனுக்கிரஹத்தால நல்லபடியா தரிசனம் பண்ண முடிஞ்சதுனு மனசுல நினைச்சுண்டேன். வெளில வந்துட்டு கீதா மாமிக்கு போன் பண்ணி பேசினேன். கல் தோன்றி மண் தோன்றா காலத்துலேந்து ப்ளாக் எழுதும் அசாத்தியமான நபர். மாமாவுக்கு கொஞ்சம் உடம்பு சரியில்லைனு கேள்விப்பட்ட போது ரொம்ப வருத்தமா இருந்தது. கோபுரத்தோட ஒரு போட்டோ எடுத்துட்டு மறுபடியும் மண்டபத்துக்கு போனா………. |
|
|
Monday, September 30, 2024
Thursday, September 19, 2024
கல்யாணம் – காதுகுத்து (Part 1)
ஆவணியாவிட்டத்துக்கு கல்லிடை போயிட்டு சதுர்த்தி முடிஞ்ச கையோட தோஹா வந்தோம். எப்போதுமே ஆடி மாசம் வெக்கெஷன்ல போகர்தால ஆத்தாடி மாரியம்மா பாட்டோட அம்மன் கோவில் திருவிழாதான் நடக்குமே தவிர கல்யாணம் காதுகுத்துனு நல்ல சாப்பாடுக்கு வழியில்லாமையே இருக்கும் இந்த தடவை தோஹால இருக்கும் ஒரு மாமா அவரோட பொண்ணுக்கு ஆகஸ்ட்ல கல்யாணம் வச்சு பத்திரிக்கையும் குடுத்து இருந்தார். பந்தக்கால் நாட்டுக்கே வந்துடரேன் கவலையே படாதீங்கோனு சொல்லிட்டேன். மெட்ராஸ்ல வந்து இறங்கின அன்னிக்கு மத்தியானமே குடும்பத்தோட திருவண்ணாமலைக்கு போயாச்சு. கோவிலுக்கு உள்ள நுழையும் போதே நல்ல மழை. அருமையான தரிசனம் பண்ணிட்டு வெளில வந்தா ‘கிரிவலம் எவ்ளோ தூரம்’னு எங்க மாமியார் கேட்டா. வாக்கிங் அப்பிடிங்கர ஊருக்கு எந்த பக்கம் வழினு தெரியாத மாமா மாமியை வச்சுண்டு பதினஞ்சு கிலோமீட்டர் கிரிவலம் நடக்காத காரியம்னு தெரிஞ்சதால யாராவது கிரினு பேர் வச்ச பையன் இருந்தா அவனை நிக்க வச்சு வேணும்னா வலம் வரலாம் னு சொன்னேன். கிரிவலத்துக்கு பதிலா கார்லையே வலம் வரலாம், கிரிவலப்பாதைல எட்டு சிவலிங்கம் வரும் போது கண்ணத்துல போட்டுக்கோங்கோனு சொல்லி கூட்டிண்டு போனேன். பதினஞ்சு வருஷம் முன்னாடி கிரிவலம் போன போது இருந்த இடமே இப்ப இல்லை. நாலு அடிக்கு பத்து கடை வருது. ஆந்திரா கோஷ்டி நிறைய வரர்தால கடை பேர் எல்லாம் தெலுங்குல எழுதியிருக்கா. திராவிட மாடல்ல ஹிந்தி மட்டும் எழுதகூடாது மத்தபடி ஓங்கோலில் இருந்து வந்தவர்களுக்கு தெலுங்கு இனிக்கும். ‘இந்த்ர லிங்கம் வருது கண்ணத்துல போடுங்கோ’னு சொன்னா எங்க மாமியார் ‘இங்கு சூடான பஜ்ஜி வடை கிடைக்கும்’னு போர்டு போட்ட எதோ ஒரு காபி கடையை பாத்து கண்ணத்துல போட்டுண்டா. அடுத்த மூனு லிங்கமும் இதே மாதிரி காப்பி கடை, டிடன் கடை, பிரியானி கடைக்கு கும்புடு போட்டு கழிஞ்சது. கொஞ்சம் மழை வேற பெஞ்சுண்டு இருந்தது. லிங்கம் ஏன் ரோட்ல இருந்து பாத்தா தெரியமாட்டெங்கர்துனு தங்கமணி ரொம்ப குறைபட்டுண்டா. உங்காத்து பெட்ரூம்ல உக்காந்துண்டு சாமி பாக்கனும்னு நினைச்சா முடியுமாடினு கேட்டேன். மழைக்கு பஜ்ஜியும் டீயும் நன்னா இருக்கும் எதாவது கடைவந்தா வண்டியை நிறுத்துங்கோனு மாமா காதுல எங்க மாமியார் சொன்னா. அவர் என்ன மூடுல இருந்தாரோ தெரியலை அவாத்து வாசல் வரைக்கும் வண்டியை நிறுத்தவே இல்லை.
அடுத்த நாள் ஆவணியவிட்டத்துக்கு கல்லிடை போயாச்சு. தெருல பழைய கலகலப்பு இல்லை. பாதிபேர் வெளியூருக்கு போயிட்டா, கொஞ்சம் பேர் நடமாட்டம் இல்லை, கொஞ்சம் பேர் போட்டோல இருக்கா. நான் வழக்கம் போல ஆன்லைன்ல தோஹால இருக்கும் மாமாக்களுக்கு உபாகர்மா பண்ணிவச்சுட்டு நானும் போட்டுண்டேன். ஒரு காலத்துல LMS மாமாவாத்து முன்னடி ரூம்ல குளத்து தீக்ஷிதர் மாமாட்ட சங்கல்பம் பண்ணர்துக்கு உக்கார இடம் கிடைக்காது. வாய்க்கால் மண்டபம் நிறைஞ்சு ஆட்கள் இருப்பா. எல்லாம் கனவு மாதிரி இருக்கு. காயத்ரி ஜபம் கழிஞ்சு அடுத்த நாள் காத்தால ஸ்ரீரங்கத்துல கல்யாணத்துக்கு விரதம் ஆரம்பம். ராத்ரியே ரெண்டு பஸ் மாறி காத்தால ஆறு மணிக்கு மண்டபம் போயாச்சு. கல்யாண மண்டபம் போகர்துக்கு முன்னாடி அம்மா மண்டபம் போயி அது எப்பிடி இருக்கும்னு பாத்துட்டு வந்தேன். காத்தால டிபன்ல ஆரம்பிச்சு அடுத்த நாள் நலுங்கு டிபன் வரைக்கும் பிரமாதமா இருந்தது. ரொம்ப நாளா என்னோட மூஞ்சி புச்தகத்துல கமலாம்பாள் காட்டெரிங் சர்வீஸ்னு ஒரு ரீல்ஸ் வீடியோ வரும். 'அவாத்து கல்யாணத்துல பரிமாறின டிபன்! இவாத்து கல்யாணத்துல போட்ட சாப்பாடு'னு வீடியோ வந்துண்டே இருக்கும். நானும் நாக்கை தொங்கபோட்டுண்டு பாப்பேன். 'கடைசி வரைக்கும் வீடியோ பாத்ததுதான் மிச்சம்'னு தங்கமணி நக்கல் அடிப்பா. சைட் அடிச்ச பொண்ணே பக்கத்து சீட்ல உக்காந்த கதையா அந்த காட்டிரிங் சர்வீசோட சமையல் இன்ப அதிர்ச்சியா இருந்தது. மடமடனு குளிச்சு ரெடியாகி டிபன் சாப்பிட்டு மேடைக்கு வந்துட்டேன். பொதுவா எந்த விஷேஷத்துக்கு வந்தாலும் வைதிக காரியங்கள்ல ஒத்தாசையா இருக்கர்து என்னுடைய வழக்கம். சாப்பிட்ட டிபன் கொஞ்சம் ஜெரிச்ச மாதிரியும் ஆச்சு பொண்ணாத்துக்காராளுக்கு உபகாரமா இருந்தாப்புலயும் ஆச்சு. முதல் நாள் காத்தால விரதம் நாந்தினு வரிசையா எல்லாம் நல்லபடியா ஆச்சு. பொண்ணோட அப்பாமாவை உண்மையில் பாராட்டனும் ஏன்னா மத்தவா மாதிரி வீடியோகிராபர் சொன்னதை எல்லாம் கேட்டுண்டு அப்பிடியே போஸ் குடுத்துண்டு இருக்காம “எந்த விஷயமும் ரெண்டாம் தடவை செய்ய முடியாது நீங்க தான் முதல் தடவை பண்ணும் போதே ஒழுங்கா எடுக்கனும்”னு சொல்லிட்டார். பாலிகை தெளிக்க வரவா எல்லாரும் பஞ்சாபி டான்ஸ் ஆடப்போறவா மாதிரி வரா. தலைமுடி ஒருபக்கம் தொங்கர்து புடவை தலைப்பு இன்னோரு பக்கம் இதுக்கு நடுல பக்கம் பக்கமா விளக்கு வேற எரியர்து. போட்டோவுக்கு போஸ் குடுத்துண்டே ஒரு மாமி பாலிகையை வாத்யார் தலைல தெளிச்சுண்டு இருந்தா, அவா தெளிக்கர்து கூட கவனிக்காம அவர் போன்ல பேசிண்டு இருந்தார். ‘அப்பிடியே நேச்சுரலா இருக்கு மாமி! இன்னொரு தடவை அவரோட தலைல தெளிங்கோ’னு சொல்லி போட்டோகிராபர் பிரகஸ்பதி ஏத்தி விட்டுண்டு இருந்தார். நாந்தி ஆகும்போது யார் யாருக்கு பிரதக்ஷிணம் பண்ணர்துனு ஒரே குழப்பம். மாப்பிள்ளையோட அப்பா பழக்கதோஷத்துல அவாத்து மாமியை பிரதக்ஷிணம் பண்ண ஆரம்பிச்சுட்டார். அவருக்கு என்ன தெரியுமோ அதைதானே அவர் பண்ணுவார். மாமிக்கு ஒரே சிரிப்பு. இதுக்கு நடுல கலிபோர்னியாலேந்து வந்த ஒரு மாமி நானும் பிரதக்ஷிணம் பண்ணலாமா? ஆனா எங்க மாமனார் மாமியார் இருக்கானு வாத்யார்கிட்ட டவுட் கேட்டுண்டு இருந்தா. பக்கத்துல இருந்த மாமா பரவால்லை சும்மா பண்ணுங்கோ சீக்கரமே குட் நியூஸ் வரும்னு சொல்லி உள்ள அனுப்பிட்டார். மஸ்கட்லேந்து வந்த ஒரு மாமி அந்த ஊர் ஞாபகத்துல ரிவர்ஸ்ல சுத்திண்டு இருந்தா. நாந்தி முடியர்துக்குள்ள போதும் போதும்னு ஆயிடுத்து. இவா எல்லாரும் பண்ணின குழப்பத்துல வாத்யாருக்கு வசுருத்ர ஆதித்ய ஸ்வரூபமே மறந்து போயிடுத்து.
மத்யானம் சாப்பாடுக்கு அப்புறம் ஒரு குட்டி தூக்கம் போட்டுட்டு சாயங்காலம் நேர திருவாணைக்கா அகிலாண்டேஸ்வரி கோவிலுக்கு போயிட்டேன். ரெண்டு நாள் முன்னாடி அக்னி ஸ்தலமான அருணாசலம் இன்னிக்கி ஜலஸ்தலமான ஜம்புகேஸ்வரம் தரிசனம் ஆச்சு. கோவில் தோட்டத்துல யானை குளிக்கர்துக்கு ஒரு தொட்டி கட்டி வச்சுருக்கா அதை போய் பாத்துட்டு வந்தேன். அங்கேந்து நேரா மண்டபத்துக்கு திரும்பி வந்தா எல்லாரும் மண்டபத்துக்கு வாசல்ல ஒரே ஆட்டம் பாட்டம் கொண்டாட்டம். காத்தால சாதுவா இருந்த அமெரிக்கா மாமா இப்ப அருள் வந்த மாமா மாதிரி ஆடிண்டு இருந்தார். மாப்பிள்ளையாத்துல பெண்களூர் பக்கம் அப்பிடிங்கர்தால ஹிந்தி பாட்டு கொஞ்சம் ஜாஸ்தியா இருந்தது. சிலபேர் இடுப்பும் நோகாம காலும் நோகாம இப்ப வரும் ரஜினிகாந்த் மாதிரி நளினமா ஆடிண்டு இருந்தா. ரெண்டு சம்பந்தியும் சேர்ந்து ஜோடியா ஆடினா. 'மாலை டம்டம் மங்கள டம்டம் பாட்டு போடுங்கோ'னு ஒரு மாமி சவுண்ட் குடுத்தா. எல்லாம் ஆடி முடிஞ்சு ஒரு வழியா மண்டபத்துக்குள்ள போனதுக்கு அப்புறம் நிறைய தோஹா நண்பர்களை பாக்க முடிஞ்சது. யாரோ ஒரு மாமா “இவர்தான் என்னோட மூத்த மாப்பிள்ளை. கலிபோர்னியால இருக்கார். கூகிள்ல வேலை பாக்கரார். கிட்டத்தட்ட கலிபோர்னியா ஆப்ரேஷன்ல நம்பர் டூ பொஷிஷன்ல இருக்கார்”னு நீட்டி முழக்கிண்டு இருந்தார். அப்போ கலிபோர்னியா Google ல ரெண்டாவது ஓ இவர்தான்னு சொல்லுங்கோனு இன்னொரு மாமா கடிஜோக் அடிச்சுண்டு இருந்தார். ‘முன்னாடி மாதிரி கூகிள்ல தேடினா எதுவும் வரமாட்டேங்கர்தே?’னு ஒரு மாமி அந்த கூகிள் மாப்பிள்ளைட்ட ரொம்ப குறைபட்டுண்டா. அமெரிக்காகாராளுக்கே உரித்தான பொருவிளங்கா உருண்டையை வாய்ல இடுக்கிண்டே பேசும் இங்கிலீஷ்ல It depends upon the search algoritham னு அவர் சமாளிக்க ஆரம்பிச்சவுடனே மாமனாருக்கு பெருமை பிடிபடலை. ஒரு வழியா பெரிய நிச்சயதார்த்தம் முடிஞ்சு எல்லாரும் சாப்பிட போனா. சாப்பாடு பிரமாதமா இருந்தது. எல்லாம் பரிமாறினதுக்கு அப்புறம் ஒரு போட்டோ எடுத்து தங்கமணிக்கு அனுப்பி வம்புக்கு இழுத்தேன். ‘எங்காத்து வத்ஸலாவுக்கு பாக்கறோம்!’ ‘வெங்கி இப்ப எம் எஸ் பண்ணின்டு இருக்கான்!’ ‘கமலா ஹாரிஸ் நம்ப ஊர் பக்கம்தான் தெரியுமோ!’ மாதிரியான சம்பாஷனைகள் போயிண்டு இருந்தது. ராத்ரி தூங்க போன போதுதான்...