i) 'வைதேகி மாமி! மாடிலேந்து வரும் போது பித்தளை குத்துப்போனியை கொண்டு வருவேளா?
அது ரொம்ப கனமா இருக்குமேடி பானு!
சரி விடுங்கோ! என்னோட புள்ளையை மட்டும் கொஞ்சம் தூக்கிண்டு வந்துடரேளா?
இல்லையில்லை நான் குத்துப்போனியவே கொண்டு வரேன், அப்பிடி ஒன்னும் அது கனம்னு சொல்ல முடியாது!
ii) 'ஏன்னா, எத்தனை தடவை பாத்ரூமுக்கு போயிட்டு போயிட்டு வருவேள்! காணாதுகண்ட மாதிரி உருளைகிழங்கு போண்டாவை திங்காதீங்கோ!னு சொன்னா காதுல வாங்கினாதானே!'
iii) 'கெளசல்யா மாமி! செளக்கியமா இருக்கேளா? பாத்து எவ்ளோ நாள் ஆச்சு?
மாறவேயில்லை 'சிக்'குனு அப்பிடியே இருக்கேளே? மாமி பாரு கோந்தை! டுடுடு டூ!
விஜயாவோட நாட்டுப்பொண் இல்லையோ நீ! கோந்தை எதுக்கு சிணுங்கிண்டு இருக்கான்? நீ எதுக்கு நைட்டியோட லாந்திண்டு இருக்கை?
மாமி! மாமி! ஒரு 5 நிமிஷம் குழந்தையை பிடிங்கோ! புடவை கட்டிண்டு வந்துடறேன்!
ஹுக்க்கும்! இதுக்குதான் மாமி! சாமி!னு சொல்லிண்டு வந்தாளா!
iv) 'வசந்தா மாமி, ஜானுவாசத்துலையே உங்க புடவைதான் பளிச்னு இருக்கு. காட்டன் சில்க்கா? விஜியோட கல்யாணத்து போது கட்டிண்ட புடவையும் காட்டன் சில்க் இல்லையோ? ஆனா அது அவ்ளோ சோபிதம் இல்லையே?
இருக்காதா பின்ன? இது எங்க அண்ணா புள்ளை கார்திக்கோட கல்யாணத்துக்கு கடைக்கே கூட்டிண்டு போய் மாட்சிங் ப்ளவுஸ் சகிதமா எங்கண்ணா வாங்கி தந்த புடவை. அது எங்க நாத்தனாரோட பொண் நிகிலா கல்யாணத்துக்கு ஆடிகழிவுல எடுத்த புடவை.
ஓஓ! உங்க நாத்தனாரே பின்னாடி நிக்கராளே!'
v) 'அருண் ஆய் போயாச்சாடா?
இன்னும் வரமாட்டேங்கர்துபா
எப்போதும் போகரமாதிரி போடா கண்ணா! லேட்டா போனா டிபன்ல அசோகா அல்வா காலியாயிடும்டா கோந்தை!
எனக்கு நம்பாத்துல போனாதான்பா வரும்!
உங்கம்மாவை மாதிரியே ஏட்டிக்கு போட்டி பேசாதே !இதுக்குனு பாம்பே போயாடா ஆய் போயிட்டு வரமுடியும்! போனவரைக்கும் போதும் வாடா கோந்தை!
அம்மா கேட்டா 'நன்னா போனேன்!' னு சொல்லனும் கேட்டையா!'
vi) 'கே கே நகர் அத்திம்பேர் எதுக்கு சுத்தி சுத்தி வந்துண்டு இருக்கார்?
ஜானுவாசம் முடிஞ்சாச்சு, சாப்பாடும் கடைசிபந்தி நடக்கர்து, மாடில தீர்த்தவாரி எதாவது இருந்தா ஓசில ப்ளூலேபிலை கவுத்தலாமேனு நெப்போலியன் மாதிரி படையெடுத்துண்டு இருக்கார்'.
vii) 'சாரதா! உன்னால ஹாண்ட் பேக்கை வச்சுக்கமுடியும்னா மட்டும் கொண்டுவந்தா போதும், சும்மா மினுக்கர்துக்கெல்லாம் கொண்டு வராதே!
இப்ப என்னாச்சுனு ஊரை கூட்டிண்டு இருக்கேள்!
'இந்தோ வந்துட்டேன்!'னு சொல்லிட்டு குடுத்துட்டு போய் 3 மணி நேரம் ஆகர்து. 'ஹாண்ட் பேக் மாமியை விட உங்களுக்கு தான் அம்சமா இருக்கு அங்கிள்!'னு எங்கக்கா புள்ளை நக்கல் அடிச்சுண்டு இருக்கான்!'
viii) 'ஏ வித்யா! கொஞ்சம் பக்கத்துல வாயேன்! நம்ப லோகா மாமி லோக்கல்லதானே இருக்கா?
ஆமாம் மன்னி, சிட்லபாக்கத்துல தான் இருக்கா, 'லோக்கல் லோகா' தானே அவளோட பட்டப்பேர். ஏது? என்ன விஷயம்?
ஒன்னுமில்லை, நாம மதுரை வரைக்கும் போகர்தால கட்டுசாதக்கூடை வாங்கிக்கரோம், அவளும் அவளோட புள்ளை உசரத்துக்கு ஒரு கேரியல்ல ஊறுகாய் முதற்கொண்டு விடாம வாங்கிக்கராளே அதான் கேட்டேன்!
அவாத்துக்காரருக்கும் ஒரு நாள் ரெஸ்ட் வேண்டாமா பாவம்!'
இந்த மாதிரி சம்பாஷனைகள் நடக்கும் ஒரு இடத்துக்கு போகபோறேன். யெஸ்! அதே தான்! டிசம்பர் ஒன்னாம் தேதி அடியேனுக்கு டும் டும் டும்! தக்குடுவோட ப்ளாக்குக்கு வந்துபோகும் நிறையா ஆட்கள்ல ஒரு சிலபேரை தான் நேர்ல பாத்துபேசியிருக்கேன். இருந்தாலும் இங்க வரவா எல்லாருமே 'ஏ தக்குடு! ஓய் தக்குடு! எலேய் தக்குடு!தக்குடு பாஸ்!'னு ரொம்ப உரிமையாவும் அன்போடையும் பாசமழை பொழியும் எல்லா நல்ல உள்ளங்களுக்கும் இந்த நல்ல விஷயத்தை சொல்லர்துல ரொம்ப மகிழ்ச்சி. உங்க எல்லாரோட அன்பும் ஆசிர்வாதமும் ஆதரவும் எப்போதும் தக்குடுவுக்கு வேணும். நக்கலும் நையாண்டியும் பண்ணிண்டு விளையாட்டுப் பிள்ளையா காலத்தை கழிச்சாச்சு. இப்ப திடீர்னு கல்யாணம்,குடும்பம்னு சொன்னா கொஞ்சம் பயமாதான் இருக்கு. இருந்தாலும் என்ன பண்ணமுடியும் அடுக்களையில் அடிவாங்கினாலும் அழாமல் சிரித்த முகமாய் வலம் வரும் அப்பாவி ரங்கமணிகள் சங்கத்துல ஒரு நாள் உறுப்பினர் ஆகியே தீரவேண்டியது காலத்தின் கட்டாயம்.
இத்தனை நாளா விண்டோ ஏர்கண்டிஷன் மாதிரி ஆத்துக்குள்ளையும் வெளிலயும் சூனா பானா வடிவேல் மாதிரி சவுண்ட் குடுத்துண்டு வளையவந்தாச்சு, இனிமே ‘ஸ்பிலிட்’ ஏசி மாதிரி வெளில மட்டும் சவுண்ட் குடுத்துண்டு ஆத்துக்குள்ள சத்தமே இல்லாம நல்லபிள்ளையா பேர் வாங்கணும். இதுவரைக்கும்

இப்படி இருந்த தக்குடு
டிசம்பருக்கு அப்புறம்

.......இப்படி ஆயிடுவான்!னு நிறையா பேர் மனப்பால்/மிளகுப்பால்/மசாலாப்பால் குடிச்சுண்டு இருக்கர்து நன்னாவே தெரியும். நானும் 'என்ன ஆகப்போகர்தோ?'னு ஆச்சர்யம் கலந்த திகிலோடதான் அடியெடுத்து வச்சுண்டு இருக்கேன். இனிமே வரக்கூடிய காலங்களில் 'தங்கமணி வச்ச சாம்பார்(?!), சாப்பாடும் பின்விளைவுகளும், தங்கமணி ஷாப்பிங்'னு வரிசையா போஸ்ட் போட முடியுமானு முயற்சி பண்ணிபாக்கலாம்.
குறிப்பு – "தேர்தல்ல போட்டியிட டிக்கெட் கிடைக்காதவாளுக்கு எல்லாம் நெஞ்சுல இடம் இருக்கு உடன்பிறப்பே!"னு சொல்லி டபாய்ச்சமாதிரி டபாய்க்காம தக்குடு போஸ்ட்ல கமண்ட் போட்டு படிக்கரவா,கமுக்கமா படிக்கரவா எல்லாரும் ஒழுங்கா மொய் பணத்தை ஏமாத்தாம அனுப்பி வைங்கோ! டாலர்,பவுண்ட்,ரியால்,யென்,தினார்,திர்ஹாம், நைஜீரியா கரன்சி எதுவாக இருந்தாலும் ஏற்றுக்கொள்ளப்படும். பாஸ்டன் நாட்டாமையோட வகை,கனடா அக்கா (ஸ்) வகைو ரிச்மெண்ட் அம்மாவோட வகை, நைஜீரியா மாமி வகை,தோஹா மாமா வகை,சிங்கப்பூர் அக்கா வகை,சியாட்டில் சிங்காரியோட வகை,லண்டன் அண்ணாச்சி வகைனு தத்தனியா சபைல வச்சு ஓதியிட்டு குடுக்க ஏற்பாடு பண்ணிடலாம்.